சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு


சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு
x
தினத்தந்தி 27 Nov 2022 1:30 AM GMT (Updated: 27 Nov 2022 1:30 AM GMT)

அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு

தேவையான பொருட்கள்:

உரித்த பூண்டு - 1 கப்

குழம்பு மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

புளி தண்ணீர் - ¾ கப்

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - ¼ டீஸ்பூன்

வெந்தயம் - ¼ டீஸ்பூன்

மிளகு - ¼ டீஸ்பூன்

சீரகம் - ¼ டீஸ்பூன்

அரைக்க:

பூண்டு - 4 பற்கள்

மிளகு ½ டீஸ்பூன்

சீரகம் ½ டீஸ்பூன்

செய்முறை:

 புளி தண்ணீரில் குழம்பு மிளகாய்த்தூளைப் போட்டு கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

 அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

 அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின்பு ஒன்றாகப் போட்டு தாளிக்கவும்.

 பிறகு உரித்த பூண்டுகளைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும். பின்னர் அதில் தயாரித்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

 கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை 'சிம்'மில் வைக்கவும். மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது 'சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு' தயார்.

 இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.

__

பூண்டு மிட்டாய்

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - ½ கப்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - ¼ கப்

உரித்த பூண்டு - 1 கப்

உப்பு - ¼ டீஸ்பூன்

செய்முறை:

 ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் உப்பு கலந்து கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் பூண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் வேகவைக்கவும். பிறகு வடிகட்டி அதில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவும்.

 இப்போது பூண்டுகளை வெளியே எடுத்து சுத்தமான துணியில் கொட்டி ஈரமில்லாமல் உலர வைக்கவும்.

 அடிகனமான வாணலியில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைப் போட்டு மிதமான தீயில் பிரவுன் நிறமாக வரும் வரை விடாமல் கிளறவும்.

 பிறகு அதில் உலர வைத்த பூண்டுகளைப் போட்டு அவற்றின் மேல் சர்க்கரை கலவை நன்றாகப் படியுமாறு கிளறவும்.

 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். ஆறிய பின்பு ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி சாப்பிடலாம்.

மருந்தாகும் பூண்டு!

பூண்டு ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. தினசரி உணவில், குறிப்பாக மழைக்காலங்களில் பூண்டை சேர்த்துக்கொள்வது பல நன்மைகளைத் தரும். இதில் இருக்கும் சல்பர் மூலக்கூறுகள் உடலில் 'குளூத்ததயோன்' என்ற ஆன்டி ஆக்சிடன்ட்டை அதிகரிக்கும். இது மனஅழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கும். பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, உடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். பூண்டைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். செரிமானம் சீராகும். இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.


Next Story