நாமக்கட்டியின் நன்மைகள்


நாமக்கட்டியின் நன்மைகள்
x
தினத்தந்தி 4 Sep 2022 1:30 AM GMT (Updated: 4 Sep 2022 1:30 AM GMT)

நாமக்கட்டியில் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து உள்ளது. இது எலும்பு அமைப்பு, தசைகள், நரம்பு மண்டலத்தின் இயக்கம் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

சில தலைமுறைகள் வரை எல்லோரது வீடுகளிலும் இருந்த பொருள் நாமக்கட்டி. தற்போது பலருக்கு அது பற்றிய விவரங்களும், பயன்களும் தெரியாது. நெற்றியில் நாமம் இடுவதற்காக பயன்படுத்தும் நாமக்கட்டி, அதையும் தாண்டி பல நன்மைகளைத் தரக்கூடியது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

தயாரிக்கும் முறை:

வெள்ளைப் பாறைகளை உடைத்து மண்ணாக மாற்றி, அதில் தண்ணீர் கலந்து இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் அந்தத் தண்ணீரை வெளியேற்றிய பிறகு, அடியில் தங்கி இருக்கும் வெள்ளைக் களிமண்ணில் இருந்துதான் நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது.

சீரான ரத்த ஓட்டம்:

நாமக்கட்டியில் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து உள்ளது. இது எலும்பு அமைப்பு, தசைகள், நரம்பு மண்டலத்தின் இயக்கம் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

உடலுக்கு குளிர்ச்சி:

நாமக்கட்டி உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்ல தீர்வாகும். காலை, மாலை இரண்டு வேளையும் நாமக்கட்டியைத் தண்ணீரில் குழைத்து வயிற்றின் மேல் தடவி வந்தால் மலச்சிக்கல் போன்ற வயிற்றுக் கோளாறுகளை குணமாக்கும். உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியைத் தரும்.

முகப்பரு மற்றும் வறட்சி:

முகத்தில் உண்டாகும் பருக்கள், கொப்புளங்களை நீக்க நாமக்கட்டியைப் பயன்படுத்தலாம். நாமக்கட்டியை அரைத்து அதில் பன்னீர் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது பருக்கள், கொப்புளங்கள் நீங்கிவிடும். வறட்சியால் முகத்தில் காணப்படும் சுருக்கங்கள் மறையும். நீண்ட நேரம் முகம் குளிர்ச்சியாக இருக்கும்.

வீக்கம் மற்றும் ரத்தக்கட்டு:

உடலில் கை, கால், மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் ரத்தக் கட்டிற்கு நாமக்கட்டி சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. இரவு தூங்கச் செல்வதற்கு முன் நாமக்கட்டியைத் தண்ணீரில் குழைத்து வீக்கம் உள்ள இடத்தில் தடவ வேண்டும். காலையில் எழுந்து வெந்நீரிலோ அல்லது சாதம் வடித்த தண்ணீரிலோ கழுவினால் விரைவில் குணமாகும்.

தாய்-சேய் மருந்து:

பிரசவத்திற்குப் பின்பு பெண்களுக்கு ஏற்படும் சருமப் பிரச்சினைகளுக்கு நாமக்கட்டியுடன் சந்தனம் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் உடம்பில் உஷ்ணத்தால் ஒரு வித சொறி மற்றும் கண்களில் கட்டி ஏற்படும். அதற்கு நாமக்கட்டியுடன் சந்தனம் கலந்து உபயோகிக்கலாம்.


Next Story