அழகை அதிகரிக்கும் 'பியூட்டி ஸ்லீப்'


அழகை அதிகரிக்கும் பியூட்டி ஸ்லீப்
x
தினத்தந்தி 14 May 2023 1:30 AM GMT (Updated: 14 May 2023 1:30 AM GMT)

குறைவான தூக்கம், பசியைத் தூண்டும் ‘கிரெலின்’ எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.

டல் வளர்ச்சிக்கும், சீரான செயல்பாட்டுக்கும் முக்கியமானது தூக்கம். இதற்கும், அழகுக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. எந்தவித சலனமும் இல்லாத ஆழ்ந்த உறக்கம் கொள்ளும்போது, உடலில் வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். இதன்மூலம் புதிய செல்கள் உருவாகும். பல்வேறு காரணங்களால் சருமத்தில் ஏற்படும் சேதங்கள் நீங்கி, பொலிவு உண்டாகும். உடல் உறுப்புகள் அனைத்தும் புத்துணர்வு அடையும். முதுமைக்கான அறிகுறிகள் குறைந்து இளமை அதிகரிக்கும். இத்தகைய முழுமையான தூக்கத்தையே 'பியூட்டி ஸ்லீப்' என்று குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவ ஆய்வுகளின்படி, ஒரு நாளுக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேர தூக்கம் அவசியமானது. ஆறு மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்கினால் ஆரோக்கிய சீர்கேடு உண்டாகி முதுமைக்கான அறிகுறிகள் விரைவாகத் தோன்றும். இரவில் போதுமான நேரம் தூங்காமல் அடுத்த நாள் காலையில் கண்விழிக்கும்போது, உங்கள் சருமமும், உடலும் சோர்வடைந்து புத்துணர்வு இன்றி காணப்படுவதை உணர முடியும்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுவது, அதிக உப்பு, காரம் உள்ள உணவைத் தவிர்ப்பது, படுக்கை அறையில் இதமான சூழலை ஏற்படுத்துவது ஆகியவை ஆழ்ந்த தூக்கம் பெறுவதற்கான வழிகளாகும்.

நன்மைகள்:

சருமத்தை மேம்படுத்தும்:

பகலில் ஏற்படும் சுற்றுச்சூழல் சார்ந்த அழுத்தங்கள் காரணமாக சருமம் பாதிப்படையும். இதில் இருந்து குணமடைவதற்கு போதுமான தூக்கம் அவசியம். தூக்கத்தின்போது வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிப்பதால் புதிய சரும செல்கள் உருவாகும். சருமத்துக்கு தேவையான ரத்த ஓட்டம் கிடைப்பதால் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் நீங்கும்.

கண் வீக்கத்தைக் குறைக்கும்:

இரவில் போதுமான நேரம் தூங்கவில்லை என்றால், கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் ஏற்படும். சில சமயங்களில் கண்கள் வீங்கியது போல் தோற்றமளிக்கும். அவற்றை மறைக்க மேக்கப் உதவினாலும், அது தற்காலிகமான தீர்வாகவே இருக்கும். இயற்கையான முறையில் அதை நீக்க விரும்பினால், இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

உடல் எடையை கட்டுப்படுத்தும்:

குறைவான தூக்கம், பசியைத் தூண்டும் 'கிரெலின்' எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும். ஆனால், சீரான தூக்கம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். கொழுப்பைக் குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

முகப்பருக்களை நீக்கும்:

தூக்கமின்மை மன அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் உடலில் ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும். இதன் விளைவாக முகப்பருக்கள் மற்றும் சரும பாதிப்புகள் ஏற்படும். 8 மணி நேரம் ஆழ்ந்து உறங்கும் போது இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாது. சரும ஆரோக்கியம் அதிகரிக்கும்.


Next Story