மழைக்காலத்தில் மாதவிடாய் சுகாதாரம்


மழைக்காலத்தில் மாதவிடாய் சுகாதாரம்
x
தினத்தந்தி 28 Aug 2022 1:30 AM GMT (Updated: 28 Aug 2022 1:30 AM GMT)

நாப்கின் மற்றும் துணிகளை அடிக்கடி மாற்றாவிட்டால், அவற்றின் மூலம் கிருமிகள் பெருகும். அந்தக் கிருமிகள் பிறப்புறுப்பில் நோய்கள் ஏற்பட காரணமாக அமையும். சில நேரங்களில், ஆபத்து விளைவிக்கும் ‘டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்’ போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

ருவமழைக் காலத்தின்போது, மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் நலன் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் மருத்துவர் வனிதா முருகன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"மழைக்காலத்தில் மாதவிடாய் ஏற்படும் நாட்களில், பிறப்புறுப்பு பாதையில் அதிக அளவில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதைத் தவிர்க்க சில எளிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். மழைக் காலங்களில் பலரும் தண்ணீர் குறைவாக குடிப்பார்கள். தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்கி வைக்காமல், 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தால், சிறுநீரக நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

இந்த நாட்களில் மாதவிடாயின் போது, துணி நாப்கின்களைத் தவிர்க்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களை பயன்படுத்துவது நல்லது. அவ்வாறு உபயோகித்த நாப்கின்களை 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். தற்போது 50 சதவீத பெண்கள் துணி நாப்கின்களையே பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பயன்படுத்துபவர்கள், அந்தத் துணிகளை சுத்தமான தண்ணீரில் சோப்பு போட்டு துவைத்து, சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து பயன்படுத்த வேண்டும். ஈரமான துணிகள் பிறப்புறுப்பின் வெளிப்பகுதியிலும், தொடை இடுக்குகளிலும் பூஞ்சைத் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

நாப்கின் மற்றும் துணிகளை அடிக்கடி மாற்றாவிட்டால், அவற்றின் மூலம் கிருமிகள் பெருகும். அந்தக் கிருமிகள் பிறப்புறுப்பில் நோய்கள் ஏற்பட காரணமாக அமையும். சில நேரங்களில், ஆபத்து விளைவிக்கும் 'டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்' போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். அதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அடி வயிற்று வலி, காய்ச்சல், சீழ் வடிதல், வெள்ளைப்படுதல், சிறுநீர் கழிக்கும்போது வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அத்தகைய நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது முக்கியம்.

உபயோகித்த நாப்கின்களை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இறுக்கமான உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அவற்றை அணியும்போது அதிக அளவில் வியர்வை உருவாகி பூஞ்சைத் தொற்று ஏற்படலாம்.

மலம் கழித்த பின்பு சுத்தம் செய்யும்போது, முன்பகுதியில் ஆரம்பித்து ஆசனவாய் பகுதியை கடைசியாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான தண்ணீர் மற்றும் மிருதுவான சோப் வகைகளை பயன்படுத்தலாம்.

பிறப்புறுப்பைச் சுத்தம் செய்வதற்கு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றே இம்மாதிரியான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். கிருமிநாசினி களைத் தவிர்ப்பது நல்லது.

இத்தகைய வழிமுறைகளைக் கடைப்பிடித்து, மழைக்காலத்தில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்" என்று மருத்துவர் வனிதா கூறினார்.


Next Story