கொய்யா விவசாயத்தில் அசத்தும் கிருஷ்ணவேணி


கொய்யா விவசாயத்தில் அசத்தும் கிருஷ்ணவேணி
x
தினத்தந்தி 4 Sep 2022 1:30 AM GMT (Updated: 4 Sep 2022 1:31 AM GMT)

கொய்யா விவசாயிகளைவிட, எனக்கு அறுவடை காலம் 10 முதல் 15 நாட்கள் கூடுதலாகவே கிடைக்கிறது. நான் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பன்னீர் குளம் கிராமத்தில் வசித்து வருகிறார் கிருஷ்ணவேணி. பட்டதாரியான இவர், புதுமையான முறையில் நாட்டு கொய்யா சாகுபடி செய்து வருகிறார். அவரது பேட்டி…

''எங்கள் குடும்பத் தொழில் விவசாயம். நான் பி.எஸ்சி. நியூட்ரீஷியன் மற்றும் எம்.எஸ்சி., புட் டெக்னாலஜி படித்து முடித்தேன். சிறு வயதில் இருந்தே எனக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் உண்டு. அப்பாவுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்ட அனுபவமும் உள்ளது.

பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள் பலருக்கும், அதனை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யத் தெரிவதில்லை. அதனால் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தும் நுட்பத்தை வெற்றிகரமாக வழிநடத்திக் காட்டவே விவசாயத்தைத் தேர்வு செய்தேன்.

எங்கள் பகுதியில் சிவப்பு நிற நாட்டுக் கொய்யாவை மட்டுமே விளைவித்து வருகிறோம். சீசன் சமயங்களில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட வியாபாரிகளும் இங்கிருந்துதான் சிவப்பு நிற நாட்டுக் கொய்யாக்களை வாங்கிச் செல்கின்றனர். தேவை அதிகமாக இருப்பதால், கொய்யா சாகுபடியையே நானும் தேர்ந்தெடுத்தேன்.

இயற்கை முறையில் சாகுபடி செய்கிறேன். பூச்சி விரட்டி, பஞ்சகவ்யம், மீன் அமிலம் போன்றவற்றை கூட பயன்படுத்துவது கிடையாது. கொய்யா மரத்துக்கு பூச்சித் தொற்று ஏற்படாமல் இருக்க 15X20 அடி தூரம் இடைவெளி விட்டு மரக் கன்றுகளை நடவு செய்துள்ளேன். 2.5 ஏக்கர் நிலத்தில் 380-க்கும் அதிகமான கொய்யா மரங்களை நட்டு வைத்துள்ளேன். இதற்காக நான் உரம் எதுவும் போடுவது கிடையாது. ஆரம்பத்தில் மரக் கன்று நடவு செய்யும்போது அடி உரமாக ஆட்டுப் புழுக்கையைப் பயன்படுத்தினேன். அதன் பின்னர் கொழுந்து கிள்ளுவதை மட்டும் சரியாகச் செய்து வருகிறேன். சரியான நேரம் பார்த்து கொழுந்து கிள்ளினால், கொய்யா சாகுபடி மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்.

மற்ற கொய்யா விவசாயிகளைவிட, எனக்கு அறுவடை காலம் 10 முதல் 15 நாட்கள் கூடுதலாகவே கிடைக்கிறது. நான் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறேன். மீதியுள்ளவற்றை மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்பிவிடுவேன். இதன் மூலம் எனக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இதுமட்டுமில்லாமல் பாரம்பரிய விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்'' என்கிறார் கிருஷ்ணவேணி.


Next Story