திரும்பி பார்க்க வேண்டிய தருணங்கள்


திரும்பி பார்க்க வேண்டிய தருணங்கள்
x
தினத்தந்தி 1 Jan 2023 1:30 AM GMT (Updated: 1 Jan 2023 1:31 AM GMT)

வழக்கம்போல கடந்த வருடமும் சில அவமானங்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம். அதை நினைத்து மனம் நொந்து இருக்கலாம். கிடைத்த அவமானங்களை கவனமாக சேர்த்து வையுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றும் வல்லமை பெற்றது.

வ்வொரு முறையும் ஒரு வருடத்தைக் கடந்து போகும் போது, 'இந்த வருடத்தில் எனக்கு அது கிடைக்கவில்லையே, எனக்கு இது நடக்கவில்லையே' என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கும். இவ்வாறு நாம் சலிப்போடு கடந்துபோகும் ஒவ்வொரு வருடமும் ஒரு பாடம் தான். அத்தனை ஆண்டுகளும் அனுபவம் தான்.

மலை உச்சியில் நின்று பார்க்கும்போது ஊரின் மொத்த அழகும் தெரிவதுபோல, ஒரு வருடம் முடியும் போது அதைத் திரும்பிப் பார்த்தோம் என்றால் அதன் மொத்த அர்த்தமும் புரியும். கடந்த வருடத்தில் நாம் திரும்பி பார்க்க வேண்டிய தருணங்களின் சிறிய தொகுப்பை இங்கே பகிர்கிறோம்.

1. கடந்த வருடத்தில் நீங்கள் சந்தித்த சில நல்ல மனிதர்கள் யாரென்று யோசித்து பாருங்கள். உங்களுக்கு கிடைத்த நல்ல நண்பர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள்.

2. கடந்த ஆண்டு ஏதாவது ஒரு வாய்ப்பை நீங்கள் தவற விட்டிருக்கலாம். அதையே நினைத்து வருத்தப்படலாம். போனது வெறும் வாய்ப்பு தான், வாழ்க்கையில்லை. வானம் அளவுக்கு வாய்ப்புகளை, வரப்போகும் வருடங்கள் கொண்டுவரப் போகின்றது.

3. கடந்த வருடத்தில் உங்களை அதிகமாக சிரிக்க வைத்த நாள் எது? மகிழ்ச்சியில் உலகத்தையே மறக்க வைத்த நாள் எது? என்று யோசித்து பாருங்கள். அது உங்கள் பிறந்த நாளாகவும் இருக்கலாம். அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவருடன் நீங்கள் செலவழித்த நாளாகவும் இருக்கலாம். அந்த தினத்தை திரும்பிப் பாருங்கள். எப்போது நினைத்தாலும் சின்ன சிரிப்பை சிதற வைக்கும் நாட்களை, சின்ன சின்ன ஞாபகங்களை கொடுத்த ஆண்டுக்கு நன்றி சொல்லுவோம்.

4. வழக்கம்போல கடந்த வருடமும் சில அவமானங்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம். அதை நினைத்து மனம் நொந்து இருக்கலாம். கிடைத்த அவமானங்களை கவனமாக சேர்த்து வையுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றும் வல்லமை பெற்றது.

5. கடந்த வருடத்தில் உங்களுக்குப் பிடித்த சிலர், உங்களிடம் இருந்து விலகி இருக்கலாம். அவர்களிடம் இருந்து எந்த செய்தியும் உங்களுக்கு வராமல் இருக்கலாம். அதைப் பற்றி அதிகம் யோசிக்காதீர்கள். சில மனிதர்களைக் கடந்து போக பழகிக்கொள்ளுங்கள்.

6. கடந்த வருடம் நீங்கள் மிகவும் ரசித்து சாப்பிட்ட உணவு எது? எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவு, இப்போது நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறவைக்கும். அந்த உணவைப் பற்றி மனதில் அசைபோட்டுப் பாருங்கள்.

7. உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர், உங்கள் நண்பர் அல்லது உங்கள் மனதுக்கு மிகவும் பிடித்த நபர்களில் யாராவது, உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை செய்து இருக்கலாம். 'இவங்க இப்படி பண்ணிட்டாங்களே' என்று அதை நினைத்து வருடம் முழுவதும் வருத்தப்பட்டு இருப்பீர்கள். முடிந்தால் அவர்களை மன்னியுங்கள். மன்னிப்பை விட பெரிய தண்டனை வேறு எதுவும் இல்லை.

மன்னிக்க மனம் வராத நேரத்தில் மறக்க கற்றுக்கொள்ளுங்கள். சில நேரங்களில் மறதி கூட வரம் தான்.


Next Story