மாமியார்-மருமகள் உறவு சிறப்பதற்கான வழிகள்


மாமியார்-மருமகள் உறவு சிறப்பதற்கான வழிகள்
x
தினத்தந்தி 29 Jan 2023 1:30 AM GMT (Updated: 29 Jan 2023 1:30 AM GMT)

மகளுக்கு அளிக்கும் அதே சுதந்திரத்தை, மருமகளுக்கும் கொடுக்க வேண்டும். அவரது செயல்பாட்டில் தவறுகள் இருந்தால், அதைக் கனிவுடன் சுட்டிக்காட்ட வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு தாய் வீட்டில் இருந்து, கணவரின் வீட்டிற்குச் சென்று வாழ்வது பற்றிய பயம் பல பெண்களுக்கு இருக்கும். திருமணத்துக்கு முன்பு வரை பெற்றோரின் அன்பு, அரவணைப்பின் கீழ் சுதந்திரமாக வாழும் பெண்கள், கணவர் வீட்டில் புதிய மனிதர்கள், புதிய சூழல் என்று பொருந்திப் போக முடியாமல் திணறுவதுண்டு. புகுந்த வீட்டில் முக்கியமான நபராக இருக்கும் மாமியார், தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளை தோழமையுடன் ஆதரித்து வழிநடத்தினால் இந்த பயம் நீங்கும்.

இருவரில், மாமியார் வயது மற்றும் அனுபவத்தில் முதிர்ச்சி அடைந்தவர் என்பதால், மருமகளுடனான உறவை அன்பின் வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பு அவருக்கு உள்ளது. யதார்த்தமாகவும், புத்திசாலித்தனமாகவும் சிந்தித்து செயல்பட்டால் மாமியார்-மருமகள் உறவு சிறப்பானதாக அமையும். அதற்கான சில ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.

மகளாக எண்ணுங்கள்:

மருமகள் மற்றொரு குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், அவரை உங்கள் மகளாக நினைத்து வழிநடத்தினால் அன்பு அதிகரிக்கும். மருமகளுக்கென தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள் இருக்கும். அதற்கு ஏற்றவாறு அவள் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். மகளுக்கு அளிக்கும் அதே சுதந்திரத்தை, மருமகளுக்கும் கொடுக்க வேண்டும். அவரது செயல்பாட்டில் தவறுகள் இருந்தால், அதைக் கனிவுடன் சுட்டிக்காட்ட வேண்டும். அதிகாரத் தோரணையில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

முன்னுதாரணமாக இருங்கள்:

மருமகளின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, தக்க தருணங்களில் அவருக்கு வழிகாட்டுதலையும், உத்வேகத்தையும் மாமியார் தர வேண்டும். மனைவியாகவும், குடும்பத் தலைவியாகவும் தன் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதற்கு, மருமகளுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். நீங்கள் கனிவாகக் கூறும் அறிவுரையும், வழிகாட்டுதலும் மருமகளை ஊக்குவிக்கும். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே புரிதல் ஏற்படும். இது மருமகளுக்கு தாயின் அன்பை உணரச் செய்யும்.

பாராட்டுங்கள்:

பாராட்டு, உறவை வலுவாக்கும். மருமகளின் செயலில் நல்லதைக் கண்டால் அவரை வெளிப்படையாகப் பாராட்டுங்கள். மற்றவர்கள் முன் வெளிப்படையாகப் புகழ்ந்து பேசுங்கள். பாராட்டுக்கள், ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு, அவர்மீது அக்கறை காட்டுவதையும் உணர வைக்கும். இதனால் மருமகள் உங்களைப் பெற்றோராகக் கருதத் தொடங்குவார்.

அக்கறை காட்டுங்கள்:

பணிக்குச் சென்ற மருமகள் வீட்டிற்கு வந்தவுடன், உங்கள் மகனை கவனிப்பதுபோல அவர் மீதும் அக்கறை காட்டுங்கள். மருமகள் எடுக்கும் முடிவுகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் கோபப்படுவதற்குப் பதிலாக, நிதானமாக அவருக்குப் புரிய வைத்து வழிநடத்துங்கள். இதனால் மாமியார்-மருமகள் உறவு, தாய்-மகள் உறவு போல மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.


Next Story