நடு கற்களின் நாயகி


நடு கற்களின் நாயகி
x
தினத்தந்தி 16 April 2023 1:30 AM GMT (Updated: 16 April 2023 1:30 AM GMT)

தமிழகம் முழுவதும் 23 இடங்களில் 33 நடுகற்களை கள ஆய்வின் வழியாக கண்டறிந்து, அதன் விவரங்களை நூலாக வெளியிட்டுள்ளார்.

"வரலாறு சார்ந்த துறைகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும்" என்கிறார் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கோவில் கட்டிட - சிற்பக் கலை ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் ப.தேவி அறிவு செல்வம். இவர் சிற்ப சாஸ்திர பயிற்றுநர், தாவர மருந்தியல் துறை வல்லுநர் என பன்முகம் கொண்டவர். இத்துறை சார்ந்து 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும், கோவில் கட்டிடக்கலை, சிற்பம் பற்றி 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில்களை கண்டறிந்து, அவற்றின் முக்கியத்துவத்தை அப்பகுதி மக்களுக்கு எடுத்துரைத்து வழிபாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். 'மதுரை நடு கற்கள்' என்ற ஆவண நூலினை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 23 இடங்களில் 33 நடுகற்களை கள ஆய்வின் வழியாக கண்டறிந்து, அதன் விவரங்களை நூலாக வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொல்லியல் வரலாற்றை சான்றுகளுடன் எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார். இவரிடம் பேசியதிலிருந்து…

நடு கற்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி உருவானது?

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக மூன்று மாத சிற்ப வகுப்பு பயிற்சி நடைபெற்றது. சிற்பங்கள் மீது எனக்கு இருந்த தீராத காதலின் அடிப்படையில், இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டேன். அதில் சிலை என்றால் என்ன? சிலைகளின் வகைகள், அதன் வரலாறு, கோவில் கட்டுமானங்கள் பற்றிய விரிவான விளக்கங்கள் கற்றுத் தரப்பட்டது.

அந்தப் பயிற்சிக்கு பின்னர் சிலைகள் மீதான எனது ஆர்வம் பல மடங்கு அதிகரித்தது. எனது தேடலின் விளைவாக மதுரை பகுதியில் கோவில் சிலைகள் தவிர்த்து, சாலையோரங்கள், குளங்கள், சுடுகாடு உள்பட பல இடங்களில் சிற்பங்கள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்தபோது, இறை உருவங்கள் இல்லாத அவை 'நடு கற்கள்' என்பது தெரிய வந்தது.

நடு கற்களின் வரலாற்றை படிக்கையில், 'பொது சேவைக்காக தன் உயிரை இழந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் அவை' என்பதைத் தெரிந்து கொண்டேன். அந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவற்றை கண்டறிந்து 'மதுரை நடு கற்கள்' என்னும் ஆவண நூலை வெளியிட்டேன். இவ்வாறு, நடுகற்கள் மீதான என்னுடைய ஆர்வமும், தேடுதலும் என்னோடு இரண்டற கலந்து விட்டது என்று சொல்லலாம்.

சிற்ப சாஸ்திர பயிற்சி வழங்கும் அனுபவங்களை பற்றிச் சொல்லுங்கள்?

கருவறையில் இருக்கும் மூலவர் சிலை சிதிலமடைந்தால் அதை எவ்வாறு கையாள வேண்டும்? சிலைகளில் வடிக்கப்பட்டிருக்கும் தெய்வ உருவங்கள் தெரிவிக்கும் செய்திகள் என்ன? போன்றவற்றையும் சிற்ப சாஸ்திர பயிற்சியின் மூலமாக கற்றுத் தருகிறேன்.

வரலாற்றின் ஆய்வுகளை தேடுவதற்கு பெண்கள் அதிகளவில் முன்வராதது ஏன்?

குடும்பச் சூழ்நிலை, நேரமின்மை, விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் பெண்கள் இந்தத் துறையில் ஈடுபடுவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சிற்ப சாஸ்திர தமிழ் நூல்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளன. பல நூல்கள் சமஸ்கிருத மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. பெண்கள் அதிக அளவில் இத்துறையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தி வருகிறேன்.


Next Story