மேடைக் கச்சேரிகளில் அசத்தும் சகோதரிகள்


மேடைக் கச்சேரிகளில் அசத்தும் சகோதரிகள்
x
தினத்தந்தி 25 Sep 2022 1:30 AM GMT (Updated: 25 Sep 2022 1:30 AM GMT)

தேசத் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களிலும், சுதந்திர தினம் மற்றும் இதர கலாசார விழாக்களிலும் பாடும் வாய்ப்புகள் பலமுறை எங்களுக்குக் கிடைத்துள்ளன. குறிப்பாக பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வருகிறோம்.

லாசார விழாக்கள் மற்றும் மேடைக் கச்சேரிகளில், கர்நாடக இசை, திரைப்படப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள் போன்றவற்றைப் பாடி அசத்தி வருகிறார்கள், கன்னியாகுமரி மாவட்டம் பூவங்காபறம்பு கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் பவ்யா மற்றும் திவ்யா.

மூத்தவர் பவ்யா, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், இளையவர் திவ்யா திருவட்டார் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பும் படிக்கிறார்கள். இவர்களின் இசைப்பயணம் குறித்து உரையாடியதில் இருந்து..

எங்கள் தந்தை பொன் ஐயப்பன், தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறார். தாய் சிவகாமி, நாகர்கோவிலில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

எங்கள் தாத்தாவும், தந்தையும் இசை மீது அதிக ஆர்வம் உள்ளவர்கள். நாங்கள் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டுமென தாத்தா ஆசைப்பட்டார். எனவே பெற்றோர், நான்கு வயதும், இரண்டு வயதுமாக இருந்தபோதே எங்களை இசையில் ஈடுபடுத்தினார்கள்.

தந்தையின் நண்பர் பத்மநாப பிள்ளை என்பவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை - மார்கழி மாதங்களில் நடைபெறும் பஜனைக்காக ஊர்க் குழந்தைகளோடு சேர்த்து எங்களுக்கும் சங்கீதம் கற்றுத்தர ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி குளச்சல் டி.வெங்கடேசன், நான்கு ஆண்டுகள் எங்களுக்குப் பஜனைப் பாடல்களுடன், கர்நாடக சங்கீதத்தையும் கற்றுக்கொடுத்தார். பின்பு, என்.ஜே. நந்தினியிடம் சங்கீதம் கற்றோம்.

எங்களின் பள்ளியும் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவித்தது. பள்ளியின் மேலாண் இயக்குநர் பிருந்தா ஸ்ரீகுமார் எங்களை கோவா, மும்பை, டெல்லி என பல வெளி மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று பாடவைத்துள்ளார். எங்கள் வளர்ச்சியில் அவரின் பங்கு மகத்தானது.

மேடைக் கச்சேரிகள் செய்த அனுபவங்களைப் பறறி கூறுங்கள்?

நாங்கள் பன்னிரெண்டு மற்றும் பத்து வயதில் இருந்தபோது, எங்களின் முதல் மேடைக் கச்சேரி குருவாயூர் செம்பை சங்கீத உற்சவத்தில் ஆரம்பித்தது. அதன்பின்பு திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் சன்னிதியில் பாடினோம். இதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைநிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு கிடைத்தது. மேலும் எங்கள் குரு நந்தினி உதவியுடன், கேரளாவில் வைக்கம், ஏற்றுமானூர், ஹரிப்பாடு போன்ற இடங்களில் உள்ள கோவில் நிகழ்ச்சிகளிலும் பாடினோம். தற்போது எல்லா ஊர்களுக்கும் சென்று பாடிவருகிறோம்.

தேசத் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களிலும், சுதந்திர தினம் மற்றும் இதர கலாசார விழாக்களிலும் பாடும் வாய்ப்புகள் பலமுறை எங்களுக்குக் கிடைத்துள்ளன. குறிப்பாக பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வருகிறோம். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. தமிழக அரசின் பூம்புகார் மையத்தால் நடத்தப்பட்ட கண்காட்சியில் பாடி, பரிசுகளையும் பெற்றோம். 'அசிட்டா சிஸ்டர்ஸ்' என்ற எங்களின் யூடியூப் சேனலிலும் பாடி வருகிறோம்.


உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள், கவுரவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

2017-ம் ஆண்டு 'வள்ளலார் விருது' வழங்கினார்கள். பிரபல தவில் வித்வான் நாஞ்சில் ராமதாஸ் 'இசை அரசி' என்ற பட்டம் வழங்கினார். திண்டிவனம் மைலம் பொம்மபுரம் ஆதீனம் மூலம் 'இசைக்குயில்' என்ற பட்டமும் கிடைத்தது. கம்பன் உலக சாதனைப் புத்தகம் சார்பாக நடைபெற்ற பத்துமணி நேர தொடர் இசை நிகழ்ச்சியில் சாதனை செய்து பட்டம் பெற்றோம். ரோட்டரி கிளப், குமரிக் கலைக்கழகம் என பல இடங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டங்களும், பரிசுகளும் பெற்றுள்ளோம்.

உங்கள் லட்சியம் என்ன?

இசைப் பயணம் எங்களோடு நின்றுவிடாமல், பலரையும் சென்றடைய வேண்டும் என்று தந்தை விரும்பியதால், மற்றவர்களுக்கும் இசையைக் கற்பித்து வருகிறோம். இசையை சிற்றூர்களில் பரவச்செய்யும் வகையில், இசைப் பள்ளியைத் தொடங்குவதே எங்களின் எதிர்காலத் திட்டம்.


மனஅழுத்தத்துக்கு மகத்தான மருந்து 'இசை'

மனநலனை மேம்படுத்தவும், பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் உதவுவது இசை. இது மனதை மட்டுமில்லாமல், உடலையும் புத்துணர்வு அடையச் செய்யும். சோகமான இசை அல்லது பாடலை கேட்கும்போது மனதில் லேசான சோக உணர்வு தோன்றும். அந்த சமயத்தில் செய்துகொண்டு இருக்கும் வேலைகளின் வேகம் குறைந்துவிடும். துள்ளலான, உத்வேகமான இசை மெட்டுக்களைக் கேட்கும்போது மனமும், உடலும் இயல்பை விட அதிக உற்சாகம் அடையும். இதை நம்மால் எளிதில் உணர முடியும்.

இசை உடல் தசைகளை தளர்வாக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். தொடர்ந்து ஒரு நிமிடம் இசையைக் கேட்கும்போது (8 முதல் 14 ஹெர்ட்ஸ்) அதன் மெட்டுக்கள் தன்னிச்சையாக மூளையின் ஆல்பா அலைவரிசை ஏற்படுத்தும் துடிப்புடன் ஒத்துப்போகின்றன. இதனால் ரசாயன மாற்றங்கள் உண்டாகி, மனதையும், உடல் இயக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது. சீரான தூக்கத்துக்கு உதவுகிறது.

இசையைத் தொடர்ந்து கேட்கும்போது மூளையின் செயல்பாடுகள் சீராகி, நினைவுத்திறன் மேம்படும். ஒரே விஷயத்தில் ஈடுபடாமல், புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தூண்டும். தினமும் 45 நிமிடங்களாவது இசை கேட்பது, உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


Next Story