டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஜொலிப்பதற்கான ஆலோசனைகள்


டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஜொலிப்பதற்கான ஆலோசனைகள்
x
தினத்தந்தி 30 April 2023 1:30 AM GMT (Updated: 30 April 2023 1:31 AM GMT)

தொழிலில் முதலீடு செய்வது, வாடிக்கையாளர்களை கவர பல உத்திகளைக் கையாள்வது என அனைத்தையும் சமூக ஊடகங்கள் வழியாக செய்யலாம். இதற்கான பலன், தொழிலின் வளர்ச்சியில் தெரியும்.

கொரோனா பரவல் காலத்திற்கு பின்பு பெரும்பாலான துறைகள் டிஜிட்டல் மயமாகி உள்ளன. குறிப்பாக உற்பத்தி மற்றும் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதலில் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் பெண்களின் பங்கேற்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தொழில் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் அவசியமானது. அதை சரியான முறையில் கையாள்வது பற்றி தெரிந்துகொள்வோம்.

வாடிக்கையாளர்களை கவருங்கள்:

சமூக ஊடகங்கள் ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் முக்கியமானவை. இதில் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் டிரெண்டிங்கான விஷயங்களுக்கேற்ப உத்திகளை மேம்படுத்த வேண்டும். இது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்கான எளிய வழியாகும். தொழிலை மேம்படுத்துவதில் விளம்பரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதற்கு, சமூக ஊடகங்களின் வீடியோ விளம்பரத்தில் முதலீடு செய்யலாம். இவற்றை வாடிக்கையாளர்களின் கருத்துகளை சேகரிக்கவும், விருப்பங்களை தெரிந்து கொள்ளவும் ஏற்ற வகையில் பயன்படுத்தலாம்.

இணையதளத்தை மேம்படுத்துங்கள்:

மொபைல் மார்க்கெட்டிங் என்பது அதிகபட்ச வாடிக்கையாளர் வரம்பை அடைவதற்கான எளிய வழி. மொபைலில் தேடும்போது, எளிதில் உங்களைப் பற்றிய தகவல் கிடைக்கும்படியாக இணையதளத்தை வடிவமைக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்க, நன்கு வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலிகளை கொண்டிருக்க வேண்டும். ஐ.ஓ.எஸ், ஓ.எஸ்.எக்ஸ், விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மென்பொருள்களை ஒன்றிணைக்கும் வகையில் உங்கள் இணையதளம் இருக்க வேண்டும்.

இ-மெயில் மார்க்கெட்டிங்:

இ-மெயில் மூலம் உங்கள் தயாரிப்புகளைப் பற்றி விளம்பரம் செய்யும்போது, அது வாடிக்கையாளரை எளிதில் சென்றடையும். இதில் வாடிக்கையாளருடன் சுமுகமான உறவை உருவாக்கும் வகையில் தானியங்கி செய்திகளைப் பயன்படுத்தலாம். அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இ-மெயில் விருப்பப் பட்டியலை உருவாக்கலாம். வாடிக்கையாளர் பட்டியலில் இருக்கும் ஒரு இணைப்பை 'கிளிக்' செய்தால், அந்த பக்கத்தில் அவர்களின் விருப்பத்துக்கேற்றவாறு உங்கள் தயாரிப்புகளின் தகவல்கள், கேள்வி-பதில்கள் காட்சியளிக்குமாறு அமைக்கலாம்.

பிளாக்குகள் பராமரிப்பு:

பொருட்களை சந்தைப்படுத்தவும், அவை பற்றி வாடிக்கையாளர்களுக்கு எழும் சந்தேகங்களை தெளிவுப்படுத்தவும் பிளாக் எனப்படும் தனி வலைப்பதிவு அவசியமானது. இதில், உங்கள் தொழில் சார்ந்த பல விஷயங்களைப் பதிவிடலாம். ஒவ்வொரு முறையும் புதிய பொருட்கள், சலுகைகள் என அனைத்தையும் இதில் புதுப்பிக்க வேண்டும். இதனுடன், தேடும் பகுதியைப் பயன்படுத்தும் உத்தியையும் மேம்படுத்த வேண்டும். வலைப்பதிவில் புதிய தகவல்களைப் பதிவிடும்போது, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான புதிய தகவல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

வளர்ச்சியை அளவிடுங்கள்:

தொழிலில் முதலீடு செய்வது, வாடிக்கையாளர்களை கவர பல உத்திகளைக் கையாள்வது என அனைத்தையும் சமூக ஊடகங்கள் வழியாக செய்யலாம். இதற்கான பலன், தொழிலின் வளர்ச்சியில் தெரியும். அந்த வளர்ச்சியைப் பற்றி அளவீடு செய்வது முக்கியம். இவ்வாறு முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் வெற்றியை கண்காணிக்க தற்போது மோஸ் அனாலிடிக்ஸ், கூகுள் அனாலிடிக்ஸ், வெப் டிரெண்ட்ஸ், பேஸ்புக் பேஜ் இன்சைட், டுவிட்டர் அனாலிடிக்ஸ், மெயில்சிம்ப், கம்பைன் மானிட்டர் என பல்வேறு இணைய பகுப்பாய்வு கருவிகள் உள்ளன. அவற்றின் உதவியால் உங்கள் தொழிலின் வளர்ச்சியைக் கணக்கிட முடியும்.


Next Story