கடல் கடந்து கலை வளர்க்கும் சுபா


கடல் கடந்து கலை வளர்க்கும் சுபா
x
தினத்தந்தி 1 Jan 2023 1:30 AM GMT (Updated: 1 Jan 2023 1:31 AM GMT)

சுபா, அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கான கல்வி திட்ட அமைப்பு இயக்குநர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர். நியூஜெர்சி தமிழ் கலைக்குழுவை நிறுவியவர். ‘ஈரோடு தமிழன்பன்’ போன்ற எண்ணற்ற விருதுகள் பெற்றவர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்து, அமெரிக்க நாட்டில் நியூஜெர்சியில் வசித்து வருபவர் சுபா. தொழில்நுட்பத் துறையில் மேலாளராக பணியாற்றும் இவர், தமிழ் இலக்கிய ஆர்வலர். பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றியவர். கவிதாயினி, சிறுகதை எழுத்தாளர். வடஅமெரிக்க தமிழ்ப் பேரவையிலும், நியூஜெர்சி தமிழ்ச் சங்கத்திலும் முக்கியப் பங்கெடுத்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்துபவர். அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கான கல்வி திட்ட அமைப்பு இயக்குநர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர். நியூஜெர்சி தமிழ் கலைக்குழுவை நிறுவியவர். 'ஈரோடு தமிழன்பன்' போன்ற எண்ணற்ற விருதுகள் பெற்றவர். இவரிடம் பேசியதில் இருந்து...

நியூஜெர்சியில் தமிழை வளர்ப்பதற்கு நீங்கள் எடுத்திருக்கும் முயற்சிகள் பற்றிச் சொல்லுங்கள்?

அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தில் இயக்குநராக இணைந்து அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகளுக்கான கல்வியை திட்டமைப்பதிலும், குழந்தைகளுக்கும்-ஆசிரியர்களுக்கும் தமிழ் மொழியை கற்பிப்பதிலும் துணை புரிகிறேன். நியூ ஜெர்சி தமிழ் பள்ளியில் ஆசிரியராக 9 வருடங்களாக பணியாற்றுகிறேன். 'நீண்ட கால ஆசிரியர்' என்ற அங்கீகாரமும், விருதும் பெற்றிருக்கிறேன். நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் மற்றும் வடஅமெரிக்க தமிழ்ப் பேரவையில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள், தமிழ் மக்களின் திறனை வெளிப்படுத்தும் வகையிலான விழாக்கள் நடைபெறுகின்றன. அதிலும் இணைந்து செயல்பட்டு வருகிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கவிதை, கதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி தமிழை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறேன்.

அமெரிக்காவில் தமிழ் கலைகளுக்கு கிடைக்கும் மரியாதை குறித்து சொல்லுங்கள்?

தமிழரின் பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் விதமாக பறை, காவடி, கரகம், சிலம்பாட்டம், கம்பத்தாட்டம், ஒயிலாட்டம் போன்றவை நடத்தப்படுகின்றன. பறையாட்டத்தை தமிழ் மேடைகளைத் தாண்டி, அமெரிக்கப் பள்ளிகள், இன்னிசை நிகழ்வுகள் மற்றும் பல தரப்பட்ட இடங்களில் நடத்துகிறோம். அமெரிக்கர்கள் கைதட்டி, ஆடி மகிழ்ந்து எங்களையும் ஊக்கப்படுத்துகின்றனர். அமெரிக்க மக்களிடையே பறைக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தேவராளன்' ஆட்டத்தையும் எங்கள் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

மேடைப் பேச்சு மூலமாக மக்களுக்கு நீங்கள் கொண்டு செல்லும் செய்தி என்ன?

பெண்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதிலும், வளர்த்துக் கொள்வதிலும் தயக்கமின்றி முன்னோக்கிச் செல்ல வேண்டும். பெண்களை அழகுப் பதுமைகளாக இல்லாமல் அறிவார்ந்தவர்களாக சமுதாயம் உணர வேண்டும். அதற்கான வாய்ப்பை சமுதாயமும், பெண்களும் ஏற்படுத்தி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எழுத்து மற்றும் பேச்சு மூலமாக சங்க இலக்கியம் முதல் புலம்பெயர்ந்த அமெரிக்கர்களின் இலக்கியம் வரை எடுத்துச் சொல்வதோடு, ஆளுமைத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் விதமாகவே என் உரைகள் அமையும். நேர்மறை எண்ணத்தை விதைப்பது, சுய முன்னேற்றம், உழைப்பு, நேரத்தை சரியாகப் பயன் படுத்துதல் போன்றவற்றில் அனைவரும் கவனம் செலுத்தும் வகையில் எனது கருத்துகள் இருக்கும்.


Next Story