அழகு தரும் 'பசுமை சுவர்'


அழகு தரும் பசுமை சுவர்
x
தினத்தந்தி 4 Sep 2022 1:30 AM GMT (Updated: 4 Sep 2022 1:30 AM GMT)

அதிகமாக வெயில் படக்கூடிய வெளிப்புற சுவர்கள் அல்லது நிழல் படர்ந்து இருக்கும் உட்புற சுவர்கள் ஆகிய இரண்டிலுமே லிவ்விங் வாலை நிறுவலாம். மிதமான வெயில் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுப்பது ‘லிவ்விங் வால்’ அமைக்க சிறந்த தேர்வாக இருக்கும்.

பெருகி வரும் வாகனங்கள் வெளியேற்றும் புகை, வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த வாயுக்கள் மற்றும் பிற கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் பெருநகரங்களில் உள்ள மேம்பாலங்களின் தூண்களில் அமைக்கப்பட்டிருக்கும் 'லிவ்விங் வால்'.

செங்குத்தான சுவர்களில் முழுவதும் செடிகளை வளர்த்து பராமரிக்கும் முறையே 'லிவ்விங் வால்' எனப்படும். தற்போது அலுவலகங்கள், நிறுவனங்கள், உணவு விடுதிகள், குடியிருப்புகள் போன்றவற்றில் இந்த முறை பிரபலமாகி வருகிறது. இதன் மூலம் காற்றின் மாசு குறைக்கப்படுவது மட்டுமில்லாமல் அறையின் அதிகப்படியான ஒலியும் குறைக்கப்படும்.

உட்புற வடிவமைப்பியல் பணியை மேற்கொள்ளும் பல நிறுவனங்கள் 'லிவ்விங் வால்' அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. நிறுவனங்களின் உதவியை நாடாமல் நாமே வீடுகளில் இதை உருவாக்கலாம். அது பற்றிய சில குறிப்புகள் இதோ...

அதிகமாக வெயில் படக்கூடிய வெளிப்புற சுவர்கள் அல்லது நிழல் படர்ந்து இருக்கும் உட்புற சுவர்கள் ஆகிய இரண்டிலுமே லிவ்விங் வாலை நிறுவலாம். மிதமான வெயில் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுப்பது 'லிவ்விங் வால்' அமைக்க சிறந்த தேர்வாக இருக்கும்.

இதனை உருவாக்க சுவரில் இருந்து குறைந்தபட்சம் ஒரு அங்குலம் இடைவெளி இருக்குமாறு 'மெஷ்' ஒன்று பதிக்கப்படுகிறது. இது சுவரோடு ஒட்டாமல் இருப்பதால், செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் சுவர்களில் படியாமல் இருக்க உதவுகிறது. இந்த மெஷ்களை ரெடிமேடாகவும் வாங்கலாம் அல்லது கம்பிகளை மொத்தமாக வாங்கி நாமாகவே குறைந்த செலவிலும் வடிவமைக்கலாம். செடிகள் வளர்க்க தேவைப்படும் இடத்திற்கு ஏற்ப மெஷ்-ன் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க ஸ்பிரே கேன்களையும், உயரமான சுவர்களில் 'லிவ்விங் வால்' அமைக்கப் பட்டிருந்தால் சொட்டு நீர் பாசன முறையையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் செடிகள் வளர்க்க குறைவான தண்ணீரே தேவைப்படும்.

அழகுக்காக வளர்க்கப்படும் செடிகள் மட்டுமில்லாமல் சமையலுக்கு மற்றும் அன்றாட தேவைக்கு பயன்படும் புதினா, கொத்தமல்லி, வெந்தயம், கீரை வகைகள் மற்றும் கற்றாழை போன்றவற்றையும் 'லிவ்விங் வால்' மூலம் பயிரிட்டு பயன் பெறலாம்.

லிவ்விங் வால் நிறுவும்பொழுது, சுவரின் பலம் மற்றும் தன்மையை கவனத்தில் கொண்டு இடத்தை தேர்வு செய்வது நல்லது.


Next Story