சோம்பலை போக்கும் ஒரு நிமிட ஜப்பானிய பயிற்சி


சோம்பலை போக்கும் ஒரு நிமிட ஜப்பானிய பயிற்சி
x
தினத்தந்தி 11 Sep 2022 1:30 AM GMT (Updated: 11 Sep 2022 1:30 AM GMT)

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில், ஒரு நிமிடத்தில், ஒரு குறிப்பிட்ட பணியை தவறாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் அடிப்படையாகும். அது, குறிப்பிட்ட வீட்டு வேலையாகவோ, கணினி கற்பதாகவோ, இசை பயில்வதாகவோ அல்லது வேறு எந்தவொரு செயலாகவோ இருக்கலாம்.

ல்வி கற்றல், விரும்பிய பணியை அடைதல் அல்லது பொருளாதார வசதிகளை பெறுதல் என சாதிப்பதற்கு பல லட்சியங்கள், இலக்குகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதை அடைவதில் ஏராளமான தடைகளை சந்திக்க நேரிடும். அவற்றில் முக்கியமானது மனதில் உருவாகும் சோம்பல் ஆகும்.

சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்கள், அன்றாட வாழ்வில் சோம்பலைத் தவிர்க்க 'கெய்சென்' என்ற எளிமையான ஒரு நிமிட பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதைக் கண்டறிந்தவர் மசாகி இமாய். 'கெய்சென்' (Kaizen) என்பது ஜப்பானிய மொழியில் 'நன்மைக்கான மாற்றம்' என்ற பொருளைத் தருகிறது. இந்த முறை பிரச்சினைகளையும், இடையூறுகளையும் எதிர்மறையாக பார்க்காமல், நிலையான மேம்பாட்டிற்கான வாய்ப்பாக பார்க்கச் சொல்கிறது.

'கெய்சென்' முறையில், அன்றாட வாழ்வில் சோம்பலை அகற்றுவதற்கான ஒரு நிமிட பயிற்சி பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில், ஒரு நிமிடத்தில், ஒரு குறிப்பிட்ட பணியை தவறாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் அடிப்படையாகும். அது, குறிப்பிட்ட வீட்டு வேலையாகவோ, கணினி கற்பதாகவோ, இசை பயில்வதாகவோ அல்லது வேறு எந்தவொரு செயலாகவோ இருக்கலாம். ஆனால், எதுவாக இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு நிமிடம் தினமும் அதை தவறாமல் செய்து வர வேண்டும்.

ஒரு நிமிடத்தில் என்ன பெரிதாக செய்துவிட முடியும் என்பதே பலரது கேள்வியாக இருக்கும். ஆனால், அந்த ஒரு சரியான நிமிடத்தில், ஒரு வேலையை தவறாமல் செய்து வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. படிப்படியாகத்தான் இந்த முறை பழக்கத்துக்கு வசப்படும். அதன் பின்னர் படிப்படியாக ஒரு மணி நேரமாக அதிகப்படுத்தி, சம்பந்தப்பட்ட இலக்கை அடைவதற்கான கால அவகாசத்தை குறைத்துக்கொள்ளலாம்.

இந்த முறையில் எவ்விதமான அவசரமோ அல்லது பரபரப்போ இல்லாமல் அமைதியாக செயல்படுவது அவசியம். அத்தகைய தொடர் முயற்சி மற்றும் பயிற்சி காரணமாக, சோம்பல் நம்மை விட்டு அகலுவதை உணர முடியும். ஒரு நிமிட செயல் மூலம் படிப்படியாக அதிகப்படுத்தப்படும் கால அளவு, கவனத்துடன் கூடிய செயல்திறனாக மாற்றம் பெறும் அதிசயத்தை 'கெய்சென்' முறை அளிப்பதாக ஜப்பானியர்கள் கூறுகிறார்கள்.


Next Story