ஆர்கானிக் மஞ்சள் தூள் தயாரிப்பு


ஆர்கானிக் மஞ்சள் தூள் தயாரிப்பு
x
தினத்தந்தி 14 May 2023 1:30 AM GMT (Updated: 14 May 2023 1:31 AM GMT)

மஞ்சள் தூளில் இருக்கும் ‘குர்குமின்’ எனும் மூலக்கூறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. புற்றுநோய் உள்பட பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

தென்னிந்திய சமையலில் மஞ்சளுக்கு முக்கியமான இடமுண்டு. இதில் இருக்கும் 'குர்குமின்' எனும் மூலக்கூறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. புற்றுநோய் உள்பட பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதேநேரம் மஞ்சள் தூளில் செய்யப்படும் கலப்படம் காரணமாக, பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

இதைத் தவிர்த்து, சுகாதாரமான முறையில் வீட்டிலேயே மஞ்சள் தூளை தயாரிக்க முடியும். எந்த ரசாயனமும் கலக்காத இயற்கையான பொருட்களைக் கொண்டு விளைந்த 'ஆர்கானிக்' மஞ்சளை இதற்கு பயன்படுத்தலாம். பெண்கள் இதை சுயதொழிலாகவும் செய்ய முடியும். அது தொடர்பான தகவல்கள் இதோ…

தேவையான பொருட்கள்:

புதிதாக பறித்த மஞ்சள் கிழங்கு - 2 கிலோ

செய்முறை:

தரமான மஞ்சள் கிழங்குகளை தேர்ந்தெடுத்து வாங்கவும். அதன் வேர்ப்பகுதியில் மண் இருக்கும் என்பதால், 15 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வைக்கவும். பிறகு இரண்டு முறை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பவும். மஞ்சள் கிழங்குகளை அதில் போட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பின்பு தண்ணீரை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும். மஞ்சள் கிழங்குகள் ஆறிய பின், அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு அவற்றை சுத்தமான பருத்தித் துணியில் பரப்பி, வெயிலில் நன்றாக உலர வைக்கவும். மஞ்சளில் இருக்கும் ஈரப்பதம் முழுவதுமாக நீங்குவதற்கு ஒரு வாரம் ஆகும்.

பின்னர் அவற்றை ஈரப்பதம் இல்லாத மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும். பின் அந்தப் பொடியை நன்றாக சலித்துக்கொள்ளவும். அதை ஈரமில்லாத டப்பாவில் கொட்டி, காற்று புகாமல் மூடி வைக்கவும்.

இப்போது சுத்தமான முறையில் நாமே தயாரித்த, ஆர்கானிக் மஞ்சள் தூள் தயார். இரண்டு கிலோ மஞ்சள் கிழங்கை, நன்றாகக் காய்ந்த பிறகு அரைத்தால் 300 கிராம் மஞ்சள் பொடி கிடைக்கும்.

அதிகமாக தயாரிக்கப் போகிறீர்கள் என்றால், மாவு அரைக்கும் மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். அதை சுத்தமான பருத்தி துணி மீது பரப்பி, சூடு நன்றாக ஆறிய பின், 'பேக்' செய்யலாம். ஈரம் படாமல் பாதுகாப்பாக வைத்தால் ஒரு வருடம் வரையிலும் இந்த மஞ்சள் தூளைப் பயன்படுத்தலாம்.

சந்தைப்படுத்தும் முறை:

உணவுப் பொருள் என்பதால், முறையாக சந்தைப்படுத்தும் முன் அதற்கு உரிய சான்றிதழ்கள் பெறுவது அவசியம். இதை ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சப்ளை செய்ய லாம். சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கும் வைக்கலாம். இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்கள் மூலம் சுலபமாக மார்க்கெட்டிங் செய்யவும் முடியும்.


Next Story