சாதிக்க வறுமை தடையில்லை- ராஜேஸ்வரி


சாதிக்க வறுமை தடையில்லை- ராஜேஸ்வரி
x
தினத்தந்தி 28 Aug 2022 1:30 AM GMT (Updated: 28 Aug 2022 1:30 AM GMT)

ஏழ்மை நிலையில் இருந்தாலும், தனது முயற்சியாலும் பயிற்சியாலும் 100 மீ, 200 மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் கலந்துகொண்டு பல சாதனைகளை படைத்திருக்கிறார் ராஜேஸ்வரி. அவரது பேட்டி.

ட்டப் பந்தயத்தில் 100 மீட்டர் தொலைவை 12.5 விநாடிகளில் கடந்து, பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்தவர் 17 வயது ராஜேஸ்வரி. ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த இவரது தந்தை ரமேஷ் கூலித் தொழிலாளி. தாயார் பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளி. ஏழ்மை நிலையில் இருந்தாலும், தனது முயற்சியாலும் பயிற்சியாலும் 100 மீ, 200 மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் கலந்துகொண்டு பல சாதனைகளை படைத்திருக்கிறார் ராஜேஸ்வரி. அவரது பேட்டி.

தடகளத்தில் ஆர்வம் வந்தது எப்படி?

சிறு வயதில் இருந்தே எனக்கு விளையாட்டு பிடிக்கும். தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றேன். இதுவே எனது விளையாட்டு ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. எனது திறமையை மேம்படுத்த தந்தையும், தாயும் ஊக்கப்படுத்தினார்கள்.

விளையாட்டுத் திறமையை மேம்படுத்திக்கொண்டது எப்படி?

ஆறாம் வகுப்பில் கோ கோ விளையாடும்போது, நான் மற்றொரு மாணவியை வேகமாக ஓடித் துரத்தியதைக் கவனித்த உடற்கல்வி ஆசிரியர் கஜேந்திரன், 'என்னால் ஓட்டப் பந்தயத்தில் ஜெயிக்க முடியும்' என்று அடையாளம் கண்டு பள்ளியில் நடந்த போட்டியில் பங்கேற்க வைத்தார்.

அதன் பின்பு மதுரையில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றேன். பின்னர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான திறனறிவு ஆய்வில் நீளம் தாண்டுதலில் 4.1 மீட்டர் தாண்டினேன். அதன்பிறகே நீளம் தாண்டுதல் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை வென்றேன்.

பள்ளியில் போதிய விளையாட்டு உபகரணங்கள் இல்லை என்பதால், உடற்கல்வி ஆசிரியர் திண்டுக்கல்லில் உள்ள விளையாட்டு மேம்பாடு மற்றும் பயிற்சி நிலையம் பற்றித் தெரிவித்து அதில் என்னைச் சேர வைத்தார். அங்கே பயிற்சியாளர் ரேகா எனக்குப் பயிற்சியளித்து என்னை மேம்படுத்தினார்.

பயிற்சி நிலையத்தில் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை பயிற்சி செய்வோம். பிறகு பள்ளிக்குச் செல்வேன். மீண்டும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டரை மணி வரை பயிற்சியளிப்பார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில்கூட பயிற்சி இருக்கும். அதற்கு ஏற்ற நல்ல உணவையும் வழங்குவார்கள்.

விளையாட்டில் இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?

ஓட்டப் பந்தயத்தில் 100 மீட்டர் தொலைவை 12.5 விநாடிகளில் கடந்து, பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்திருக்கிறேன். ஏராளமான போட்டிகளில் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும், கேடயங்களையும் வாங்கியிருக்கிறேன். மாநில அளவிலும், மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற தனிநபர் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறேன்.

உங்கள் லட்சியம் என்ன?

ஒலிம்பிக்கில் பங்கேற்று, உசைன் போல்ட் சாதனையை முறியடித்து தாய்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது ஒரே லட்சியம். நிச்சயம் ஒருநாள் நான் அந்த சாதனையைச் செய்வேன்.


Next Story