விளையாட்டில் ஆண்-பெண் பேதமில்லை - மாலதி


விளையாட்டில் ஆண்-பெண் பேதமில்லை - மாலதி
x
தினத்தந்தி 18 Sep 2022 1:30 AM GMT (Updated: 18 Sep 2022 1:30 AM GMT)

சிறு வயதில் இருந்தே விளையாட்டு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது ஆர்வத்தை பெற்றோரும் புரிந்துகொண்டனர். கல்வியைப் போல, விளையாட்டிலும் ஊக்கம் அளித்தார் எனது தந்தை. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றேன்.

"நமக்குள் இருக்கும் திறமைகளை உணர்ந்து கொண்டால், வெற்றி பெறுவதற்கு வாழ்க்கை பல வழிகளை உருவாக்கித் தரும். அப்படித்தான் விளையாட்டு, எனக்கான அடையாளத்தை உருவாக்கி இருக்கிறது" என்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனை மாலதி. இதோ அவர் பேசுகிறார்.

''சிறு வயதில் இருந்தே விளையாட்டு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது ஆர்வத்தை பெற்றோரும் புரிந்துகொண்டனர். கல்வியைப் போல, விளையாட்டிலும் ஊக்கம் அளித்தார் எனது தந்தை. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றேன். அதனைத் தொடர்ந்து பள்ளியில் ஆக்கி அணியில் சேர்ந்து, போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் பல பரிசுகள் வாங்கினேன்.

அந்த சமயத்தில்தான் குத்துச் சண்டை விளையாட்டைப் பார்த்து, அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஏழாம் வகுப்பு முதல் அதற்கான பயிற்சியைத் தொடங்கினேன்.

பண வசதி இல்லாவிட்டாலும், என்னுடைய கனவுகளை நிறைவேற்றுவதில் தந்தை துணையிருந்தார். தொடர்ந்து பயிற்சி பெற்று மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்று, மாநில அளவில் இதுவரை 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறேன். தொடர் முயற்சியின் மூலம் 3 முறை தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டேன்.

சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்குபெற்று, மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றேன். வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். தற்போது ஒரு தனியார் கல்லூரியில் விளையாட்டுத்துறை இட ஒதுக்கீட்டில், உடற்கல்வித் துறையில் படிப்பதற்கு தேர்வாகியுள்ளேன்.

போட்டிகளுக்காக பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும்போது, பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரும். அவற்றால் துவண்டு போகும்போதெல்லாம் ''நம் திறமைதான் பேசப்பட வேண்டும். நம்முடைய பின்புலம் அல்ல'' என்று கூறி எனது பயிற்சியாளர் ஊக்கமூட்டுவார்.

கடந்த 7 ஆண்டுகளாக தினந்தோறும் பயிற்சி செய்து வருகிறேன். சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாட வேண்டும். உலக அளவிலான குத்துச் சண்டையில் சிறந்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற வேண்டும் என்பதே எனது லட்சியம்.

விளையாட்டு என்பது ஆண்-பெண் சார்ந்தது அல்ல. முயற்சியையும், பயிற்சியையும் சார்ந்தது. நமக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, முடிந்தவரை முயற்சி செய்தால் நமது லட்சியத்தை ஒரு நாள் அடைந்தே தீருவோம்" என்றார் மாலதி.


Next Story