4 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


4 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x

அரசு வேலை வாங்கி தருவமாக ரூ.96 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுச்சேரி

அரசு வேலை வாங்கி தருவமாக ரூ.96 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பொதுப்பணித்துறை ஊழியர்

புதுவை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது57). பொதுப்பணித்துறை ஊழியர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு தர்மாபுரி முருகன், கொசப்பாளையம் பகவதி பெருமாள் (77), திருக்கனூர் செட்டிப்பட்டு இளங்கோ (64) ஆகியோருடன் கூட்டாக பொதுப்பணித்துறையில் மஸ்தூர் வேலை வாங்கித்தருவதாக தெரிவித்தார்.

அதனை உண்மையென நம்பி புதுவையின் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கொடுத்து பொதுப் பணித்துறையில் மஸ்தூராக வேலை பெற்றனர். அவர்களுக்கு பணி ஆணை, வருகை பதிவு, ஒருசில மாதங்களுக்கு சிறிய தொகை சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது.

போலி நியமன ஆணை

இந்தநிலையில் வேலை கிடைக்கப்பெற்றவர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படாமல் இருந்தது பலருக்கு சந்தேகங்களை எழுப்பியது. இதுபற்றி விசாரித்தபோது தான், போலி பணி நியமன ஆணை கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பொதுப்பணித்துறை ஊழியரான ராமலிங்கம் அவரை உதவி பொறியாளர் எனக்கூறிக்கொண்டு முருகன், பகவதி பெருமாள், இளங்கோ ஆகியோரை புரோக்கர்களாக வைத்துக்கொண்டு ரூ.95 லட்சத்து 93 ஆயிரத்து பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் இ.பி.கோ. சட்டப்பிரிவு 419, 420, 468, 471 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

7 ஆண்டு சிறை

அவர்கள் மீதான வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கே.மோகன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

ராமலிங்கம், முருகன், பகவதி பெருமாள், இளங்கோ ஆகியோர் மீதான மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் கணேஷ் ஞானசம்பந்தன் ஆஜராகி வாதாடினார்.


Next Story