லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு


லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
x

காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். ஆம்புலன்ஸ் வேன் வர தாமதமானதை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்கால்

காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். ஆம்புலன்ஸ் வேன் வர தாமதமானதை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்

காரைக்கால் சேத்திலால் நகரைச் சேர்ந்தவர் மதியரசன். டெய்லர். இவரது மகன் கமல்நாதன் (வயது 19). இவர் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் உள்ள காமராஜர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று பிற்பகல் தனது நண்பர் சுடரொளியுடன் (19) மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிகொண்டிருந்தார். திருநள்ளாறு சாலை ஓ.என்.ஜி.சி. குடியிருப்பு அருகே சென்றபோது, காரைக்காலில் இருந்து வந்த சரக்கு லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்களின் பக்கவாட்டில் மோதியது.

ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழப்பு

இதில், லாரியின் பின்சக்கரத்தில் கமல்நாதன் சரிந்து விழுந்ததில், தலை நசுங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதேபோல், அவரது நண்பர் சுடரொளி பலத்த காயம் அடைந்தார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வேன் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வந்த ஆம்புலன்ஸ் வேன், பலியான மாணவரின் உடலை சாலையிலேயே விட்டுவிட்டு, உயிருக்கு போராடிய மாணவர் சுடரொளியை மட்டும் ஏற்றிக் கொண்டு காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றது.

உறவினர்கள் முற்றுகை

இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்து இருந்த சக மாணவர்கள், அங்கு வந்த ஆட்டோவில் கமல்நாதன் உடலை ஏற்ற முயன்றனர். அதற்கு அங்கிருந்த போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் மாணவர் கமல்நாதனின் உடலை மற்ற மாணவர்கள் கைகளில் சுமந்தவாறு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி நோக்கி நடந்துசென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி மாணவரின் உடலை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வேன் வர தாமதமானதை கண்டித்து, மாணவர்கள், கமல்நாதனின் உறவினர்கள் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய விசாரணை

இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு துணை கலெக்டர்கள் ஜான்சன், பாஸ்கர் வட்டாட்சியர் மதன்குமார், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆம்புலன்ஸ் வேன் காலதாமதமாக வந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அவர்கள் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்களும், உறவினர்களும் கலைந்து சென்றனர்.இந்த விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சரக்கு லாரி மோதி நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் காரைக்காலில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story