எச்.ஐ.வி. இல்லாத சமுதாயத்தை உருவாக்க அரசு முனைப்பு


எச்.ஐ.வி. இல்லாத சமுதாயத்தை உருவாக்க அரசு முனைப்பு
x

எச்.ஐ.வி. இல்லாத சமுதாயத்தை உருவாக்க அரசு முனைப்பு காட்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தாா்.

புதுச்சேரி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தின கருப்பொருளாக 'சமநிலைப்படுத்து' என்கிற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் மற்றவர்களை போல சமூகத்தில் சரிசமமாக வாழ்வதற்கு வேண்டிய இணக்கமான சூழ்நிலைகளை உருவாக்கி தருவதும், அவர்களையும் சக மனிதர்களாக மதித்து நடக்க வேண்டும் என்பதும் இதன் பொருள் ஆகும். எச்.ஐ.வி. இல்லாத சமுதாயத்தை உருவாக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. எச்.ஐ.வி. தாக்கும் வாய்ப்பு அதிகம் உடையவர்கள் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்கள் போன்றவர்களியே விழிப்புணர்வு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்ந்து வருபவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களை போல வாழ வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களின் துயரை போக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள உலக எய்ட்ஸ் தின கருப்பொருளின் அடிப்படையில் சமூகத்தின் ஒர் அங்கமாக இருக்கின்ற எச்.ஐ.வி. தொற்றாளர்களும் நம்மில் ஒருவரே என்பதை கருத்தில் கொண்டு அவர்களை அன்போடு அரவணைத்து சமமாக வாழ நாம் அனைவரும் மனதார உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story