பொழுதுபோக்குக்காக மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது


பொழுதுபோக்குக்காக மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது
x

மோட்டார் சைக்கிள்களை பொழுதுபோக்குக்காக திருடி ரூ.500, 1000 என சொற்ப தொகைக்கு விற்று செலவு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை

மோட்டார் சைக்கிள்களை பொழுதுபோக்குக்காக திருடி ரூ.500, 1000 என சொற்ப தொகைக்கு விற்று செலவு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் வாகன சோதனை

திருபுவனை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தாகோதண்டராமன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் குற்றவியல் போலீசார் அசோகன், சத்தியமூர்த்தி ஆகியோர் புதுச்சேரி - தமிழக எல்லையான மதகடிப்பட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.500-க்கு விற்பனை

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் வழிமறித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சாணிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி (வயது 19) என்பதும், மோட்டார் சைக்கிள்களை திருடுவதை ஒரு பொழுதுபோக்காக செய்துவந்ததும் தெரியவந்தது.

திருடும் மோட்டார் சைக்கிள்களை தெரிந்த நபர்களுக்கு ரூ.500, ரூ.1000-க்கு விற்று கை செலவு செய்துள்ளார்.

6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

புதுவை ரெட்டியார்பாளையத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும், ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, பெரியகடை, திருபுவனை ஆகிய பகுதிகளில் தலா ஒரு மோட்டார் சைக்கிளையும் ராஜபாண்டி திருடியுள்ளார்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் விழுப்புரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story