மண் பானைகளை தரையில் போட்டு உடைத்து போராட்டம்


மண் பானைகளை தரையில் போட்டு உடைத்து போராட்டம்
x

வில்லியனூர் தொகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி மண் பானைகளை தரையில் போட்டு உடைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

வில்லியனூர்

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட உத்திரவாகிணிபேட், பீமாராவ் நகர், பெரியபேட், புதுப்பேட், எஸ்.எஸ்.நகர் பகுதிகளுக்கு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரில் உப்புத்தன்மை அதிகளவில் இருப்பதால் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் உகந்ததாக இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்தி, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறையை கண்டித்து மண் பானைகளை தரையில் போட்டு உடைத்து, சுகாதாரமான தண்ணீர் கேட்டு கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story