வியாபாரி வீட்டில் வெடிகுண்டு வீசிய சிறுவன் கைது


வியாபாரி வீட்டில் வெடிகுண்டு வீசிய சிறுவன் கைது
x

லாஸ்பேட்டையில் வியாபாரி வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

லாஸ்பேட்டையில் வியாபாரி வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

வெடிகுண்டு வீச்சு

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 50). சண்டே மார்க்கெட் வியாபாரி. கடந்த 2 மாதங்களுக்கு முன் நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி சென்றனர். இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பரமசிவத்தின் 2-வது மகன் விக்கிக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

சிறுவன் கைது

இந்த வழக்கு தொடர்பாக இன்று லாஸ்பேட்டை நெருப்புகுழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் விக்கியும், அந்த சிறுவனும் முதலில் நண்பர்களாக இருந்தனர்.

விக்கி அந்த சிறுவனின் தாயார் குறித்து அவதூறாக பேசியதால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் விக்கியை பயமுறுத்தும் நோக்கில் விக்கி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை சிறுவன் வீசியுள்ளான்.

யூ-டியூப் பார்த்து...

இதற்காக செல்போன் மூலம் யூ-டியூப்பில் வெடிகுண்டு எவ்வாறு தயாரிக்கலாம் என பார்த்து, அரியாங்குப்பம் பகுதியில் நாட்டு பட்டாசு வாங்கி அதனை வைத்து வெடிகுண்டு தயாரித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


Next Story