21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்


21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
தினத்தந்தி 21 Dec 2024 9:39 AM IST (Updated: 21 Dec 2024 9:28 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 21 Dec 2024 7:51 PM IST

    விவசாயிகள் மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை செய்யும்போது எந்தவித ஜி.எஸ்.டி. வரியும் இல்லை - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 55-வது ஆலோசனை கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கவுன்சில் கூட்டத்தில், ஆயுள், மருத்துவ காப்பீடு மீதான வரியை குறைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி மாதம் நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களில் இருந்து காக்கும் ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல் மீதான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விவசாயிகள் பச்சை மிளகு, காய்ந்த மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை செய்யும்போது எந்தவிதமான ஜி.எஸ்.டி. வரியும் இல்லை.

    ஆனால் அவற்றை, வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும்போது அவற்றுக்கு வரி உண்டு. அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

    சிறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரி துறையில் பதிவு செய்யும் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி கடன் பெற்றவர்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தின் மீது எந்த ஜி.எஸ்.டி.யும் இல்லை. உணவு டெலிவரி சேவை மீது ஜி.எஸ்.டி. விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 21 Dec 2024 7:18 PM IST

    3வது ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது.

    இதில் இரு ஆட்டங்கள் முடிந்த நிலையில், 1-0 என ஆப்கானிஸ்தான் தொடரில் முன்னிலை பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 30.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    தொடர்ந்து 128 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. இதனால் 26.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

  • 21 Dec 2024 6:48 PM IST

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை கீழநத்தம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார்.

    இருப்பினும் அந்த கும்பல் மாயாண்டியை துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் கவன குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்த நெல்லை காவல் ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

  • 21 Dec 2024 6:42 PM IST

    சென்னை கைலாசநாதர் கோவில் திருப்பணி - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை, மாதவரம், அருள்மி            கு மாரியம்மன் திருக்கோவிலை புதிய கருங்கல் கட்டுமான திருக்கோவிலாக கட்டுவது குறித்தும், வேணுகோபால் நகர், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருக்குள திருப்பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, இத்திருக்கோவில் கருங்கல் கட்டுமானத்திற்கு ரூ.1.50 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, மாநில வல்லுனர் குழு மற்றும் தொல்லியல் குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் ரூ.50 லட்சம் உபயதாரர் நிதியாக பெற்று தருவதாகவும், மீதமுள்ள தொகை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். எஞ்சியுள்ள ரூ.1 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள், துறையின் மூலம் செய்து கொடுக்கப்படும். இத்திருப்பணி 2026 ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்திட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

    அதேபோல் மாதவரம் அருள்மிகு கற்பகாம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோவில் திருக்குள திருப்பணி ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை இன்றைய தினம் ஆய்வு செய்கின்றபோது இப்பணிக்கு கூடுதல் நிதி தேவை என சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார். அதனையும் ஏற்று கூடுதல் நிதியை வழங்கி வருகின்ற 2025 மே மாதத்திற்குள் நிறைவு செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


Next Story