வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்கவேண்டிய இந்தியாவில் உள்ள தீவுகள் !
இந்தியாவை பொறுத்தவரை தீவு என்றால் அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள்தான் பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வரும். இவைகளை தவிர்த்து தனித்துவமான பயண அனுபவங்களை வழங்கும் தீவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...
சோராவ் தீவு : கோவாவில் உள்ள மண்டோவி ஆற்றில் அமைந்துள்ள தீவாகும். இது பல்லுயிர் பெருக்கம் கொண்ட உயிரினங்கள் வசிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. அத்துடன் அழகிய நிலப்பரப்பையும், அமைதியான சூழலையும் கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகளையும் வரவழைக்கிறது.
திவார் தீவு : கோவாவில் உள்ள மண்டோவி ஆற்றின் நடுவில் இருக்கும் தீவு இது. கோவாவின் பரபரப்பான கடற்கரை சூழலுக்கு மாற்றாக நிசப்தமான இடத்தை தேடுபவர்களுக்கு இந்த தீவு சிறந்த தேர்வாக அமையும்.
டையூ தீவு : குஜராத் மாநிலத்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள டையூ தீவு போர்த்துகீசிய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக காட்சி அளிக்கிறது. வரலாற்றுடன் தொடர்புடைய இடமாக இருந்தாலும் அமைதியான கடற்கரை சூழல் சுற்றுலா பயணிகளை தன்வசப்படுத்துகிறது.
பாம்பன் தீவு : இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இந்த தீவு அமைந்துள்ளது. இந்த தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் பாம்பன் பாலம் பிரபலமானது. ஆன்மிக ரீதியாகவும், சுற்றுலா ரீதியாகவும் பலரையும் ஈர்க்கும் இந்தியாவின் முக்கியமான தீவாக விளங்குகிறது.
மஜூலி : அசாம் மாநிலத்தின் வழியாக பாயும் பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள தீவு இது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய நதி தீவாக அறியப்படுகிறது. கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இடம் பிடித்து இருக்கிறது. இங்கு நடைபெறும் திருவிழாக்கள், அசாமின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும்.