இரவு சரியான தூக்கம் இல்லையா..? ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம்!!
சரியாக தூங்கவில்லை என்றால் மன அழுத்த ஹார்மோன் கார்டிசால் (Cortisol) அதிகமாக வெளியிடப்படுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
மனிதனுக்கு இரண்டு பசி ஹார்மோன்கள் சுரக்கிறது. ஒன்று பசியை குறைக்கும் ஹார்மோன் லெப்டின் (Leptin), மற்றொன்று பசியைத் தூண்டும் ஹார்மோன் (Ghrelin)ஜெர்லின்.
சரியாக தூங்கவில்லை என்றால் மனித உடலில் பசியைக் குறைக்கும் லெப்டின்( Leptin)ஹார்மோன் அளவு குறைகிறது. பசியைத் தூண்டும் ஹார்மோன் ஜெர்லின்(Ghrelin) அளவு அதிகரிப்பதால், அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
சரியாக தூங்காதவர்கள் ஒரு நாளைக்கு மற்றவர்களைவிட 385 கலோரிகள் அதிகமாக உண்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது உடல் பருமனை அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 7 மணி நேரமாவது தூங்கவேண்டும். இல்லையெனில் நீரிழிவு நோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாகும்.
இரவு நேர சர்க்கரை தாழ்நிலை :
சர்க்கரை நோயாளிகள் இரவில் அயர்ந்து தூங்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையலாம். இந்த அளவு தூங்கும் பொழுது 70மிகி/ டெசி லிட்டருக்கு கீழ் குறையும் போது (நாக்டர்னல் ஹெப்போகிளைசீமியா) இரவு நேர ரத்த சர்க்கரை தாழ்நிலை ஏற்படுகிறது.
இரவு நேர சர்க்கரை தாழ்நிலை ஏற்பட முக்கிய காரணங்கள்.
இரவு உணவை தவிர்ப்பது அல்லது உணவின் அளவை குறைப்பது மற்றும் இரவு தூங்கும் முன் மது அருந்துதல்.
இரவு தூங்கும் முன் கடுமையான உடற்பயிற்சி செய்தல்.
ஞாபகமறதியாலும் அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ அதிகமான அளவு மாத்திரைகள் அல்லது இன்சுலின் செலுத்திக் கொள்ளுதல்.