கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் ரெட் லீப் மலர்களின் சீசன் துவங்கியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிழல் தரும் மரங்களும், அரியவகை மலர்ச் செடிகளும் நடவு செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக ரெட்லீப் என அழைக்கப்படும் சிவப்பு வண்ணத்தில் பூக்கும் இலைமலர்கள் சாலையோரங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் பூத்து குலுங்குகின்றன.
மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் இந்த மலர்கள் பூத்து குலுங்குவது கண்கொள்ளாக் காட்சியாக திகழ்கிறது. சீசன் நிறைவடைந்த பின்னர் மீண்டும் பச்சை நிறத்திற்கு மாறிவிடும் தன்மை கொண்டதாகும்.
இந்த அரியவகை மலர்கள், கோத்தகிரி மலைப் பாதையில் உள்ள சாலையோரங்களில் ஏராளமாக காணப்படுகின்றன.
பச்சை பசேல் என காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே பயிரிடப்பட்டுள்ள இந்த மலர் நாற்றுக்களில் சீசன் காரணமாக மலர்கள் பூத்து, சிவப்பு கம்பளம் விரித்தாற்போல காட்சியளிக்கின்றன.
இந்த செடிகளில் பூத்துக் குலுங்கும் அழகிய மலர்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.