கடலின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்.!!

கடற்கரை மணலில் விளையாடுதல், கடல் அலையின் ஆக்ரோஷத்தையும், அமைதியையும் ஆசுவாசமாக அமர்ந்து ரசித்தல், கடல் காற்றை சுவாசித்தபடி நடைப்பயிற்சி செய்தல் என கடற்கரையுடனான பந்தம் தவிர்க்க முடியாதது.
கடற்கரையில் நேரத்தை செலவிடுவது ஆச்சரியம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சைனஸ் பிரச்சினை
சைனஸ் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் சுவாச பாதைகள் தடையின்றி செயல்படுவதற்கு உப்பு நீரை கொண்டு முகம் கழுவுவதுண்டு. கடல் காற்றில் கலந்திருக்கும் நுண்ணுயிரிகள் சைனஸ் ஆரோக்கியத்திற்கு உதவும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக இருக்கிறது.
பதற்றம்
பணியில் ஏற்படும் மன அழுத்தம், குடும்பத்தில் நிலவும் குழப்பம் காரணமாக மனச்சோர்வு ஏற்பட்டால் இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது அவசியமானது. கடல் நீரில் சிறிது நேரம் விளையாடினாலே போதுமானது. அது பதற்றம், மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும்.
தூக்கம்
உடலுக்கும், உணர்ச்சிகளுக்கும் தூக்கம் முக்கியமானது. இரவில் தூக்கம் வராமல் அவதிப்பட்டால் கடற்கரையோரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். அது இரவில் ஒரு மணி நேரம் கூடுதலாக தூங்குவதற்கு வழிவகுக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
பருவகாலங்களில் ஏற்படும் காய்ச்சலை தவிர்க்க கடலோரப் பகுதிக்கு செல்வது சிறந்ததாக அமையும். தாதுக்கள், துத்தநாகம், செலினியம் மற்றும் சிலிக்கான் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் கடல் நீரில் கலந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு அமைப்புக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.
உடற்பயிற்சி
உடலமைப்பை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதற்கு கடல் எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. கடற்கரையில் நடைப்பயிற்சி, ஜாக்கிங் மேற்கொள்வதுடன் துடுப்பு படகை இயக்கலாம். இது கைகளுக்கும், உடல் பாகங்களுக்கும் சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.
சுத்தமான காற்று
கடல் ஒரு இயற்கை வடிகட்டியாக செயல்படுகிறது. அங்கு காற்று மாசுபாடு அடைவதற்கான சூழல் குறைவு. மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது மாசுபாடு குறைவாகவே இருக்கும்.
ஆழ்கடல் நீர்
கடல் வழங்கும் மிகப்பெரிய ஆரோக்கிய வரங்களில் ஒன்றாக ஆழ்கடல் நீர் இருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதிக தூய்மை, குறைந்த வெப்பநிலை, தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவும்.
மணலில் நடத்தல்
நடை பாதை, சாலைகள், தெருக்கள் போன்ற கடினமான தரைத்தள பரப்புகளை விட கடற்கரையில் நடப்பது, ஓடுவது கால்களுக்கு இதமளிக்கும். கால் நரம்புகளை வலுப்படுத்தும்.