இரும்பு கம்பியால் தாக்கி போலீஸ்காரர் கொலை; 2-வது மனைவியிடம் போலீஸ் விசாரணை


இரும்பு கம்பியால் தாக்கி போலீஸ்காரர் கொலை; 2-வது மனைவியிடம் போலீஸ் விசாரணை
x

பல்லாரி அருகே இரும்பு கம்பியால் தாக்கி போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2-வது மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பல்லாரி:

நகர ஆயுதப்படை போலீஸ்காரர்

பல்லாரி மாவட்டத்தில் நகர ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் ஜாபர். இவர், பல்லாரி டவுனில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். ஜாபரின் முதல் மனைவி நவின்தாஜ். இவரது மூலமாக ஜாபருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், தனது முதல் மனைவி கடந்த 4 ஆண்டுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த போது அவரை ஒரு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக போலீஸ்காரர் ஜாபர் அழைத்து சென்றார்.

அப்போது அந்த ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றிய ராமக்கா என்பவருடன் ஜாபருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஜாபருடன் வாழ பிடிக்காமல் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு நவின்தாஜ் புறப்பட்டு சென்று விட்டார். இதையடுத்து, நவின்தாஜை செய்யாமலேயே 2-வதாக ராமக்காவை ஜாபர் திருமணம் செய்து கொண்டார். தனது 2-வது மனைவியுடன் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இரும்பு கம்பியால் தாக்கி கொலை

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் தனது வீட்டில் ஜாபர் பலத்தகாயங்களுடன் உயிருக்கு போராடினார். உடனே அக்கம் பக்கத்தினரிடம் தனது கணவரை யாரோ அடித்து தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக ராமக்கா கூறினார். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீஸ்காரர் ஜாபர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் பல்லாரி டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

முதல் மனைவி நவின்தாஜை பிரிந்து வாழ்ந்தாலும், அவருடன் உள்ள தொடர்பை ஜாபர் விடவில்லை. மாறாக அடிக்கடி நவின்தாஜ் வீட்டுக்கும் அவர் சென்று வந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜாபருக்கும், ராமக்காவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கி, தனது கணவரை ராமக்காவை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து பல்லாரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமக்காவை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story