மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியை முதல்-மந்திரி ஆக்க பா.ஜனதா முடிவு


மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியை முதல்-மந்திரி ஆக்க பா.ஜனதா முடிவு
x

கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றால் மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியை முதல்-மந்திரி ஆக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

பெங்களூரு:-

முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி பெங்களூரு தாசரஹள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பஞ்சரத்னா யாத்திரை

நாங்கள் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறோம். அதற்காக பஞ்சரத்னா யாத்திரையை மேற்கொண்டுள்ளேன். அடுத்த மாதம்(மார்ச்) பெங்களூருவில் இந்த யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளேன். வருகிற 27-ந் தேதி வரை 2-வது கட்ட பஞ்சரத்னா யாத்திரை நடைபெறும். இதில் சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டும் ஓய்வு எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.

பெங்களூருவில் 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். வருகிற மார்ச் 20-ந் தேதியில் இருந்து 25-ந் தேதிக்குள் பஞ்சரத்னா யாத்திரை நிறைவு விழா நடத்தப்படும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, தாசரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கினேன். ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நான் ஒதுக்கிய நிதியை வாபஸ் பெற்று கொண்டனர்.

ஆசிரியர்கள் நியமனம்

நான் முதல்-மந்திரி ஆனால் நல்ல திறன்மிகு ஆசிரியர்களை நியமனம் செய்வேன். அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவேன். கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்துவோம். சான்ட்ரோ ரவியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் எந்த தகவலையும் இந்த அரசு வெளியிடவில்லை.

நான் மேற்கொண்டுள்ள பஞ்சரத்னா யாத்திரை குறித்து மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றால் மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியை முதல்-மந்திரி ஆக்க பா.ஜனதா, சங்பரிவார் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. 8 பேரை துணை முதல்-மந்திரி ஆக்கவும் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் பெயர் கூட எனக்கு கிடைத்துள்ளது. அவர் நமது பழங்கால பிராமணர் வகுப்பை சேர்ந்தவர். பிராமணர் வகுப்பில் 2, 3 பிரிவினர் உள்ளனர்.

பிரகலாத்ஜோஷி

சிருங்கேரி மடத்தை உடைத்த பிராமணர் பிரிவை சேர்ந்தவர் பிரகலாத்ஜோஷி. மகாத்மா காந்தியை கொன்ற பிராமணர் வகுப்பை சேர்ந்தவர். அவர் சிருங்கேரி மடத்திற்கு சேர்ந்தவர் அல்ல. மைசூரு பகுதியில் உள்ள பிராமணர்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் பிரகலாத்ஜோஷி நாட்டை உடைக்கும் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர். அதனால் கர்நாடக மக்கள் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சதியில் சிக்க வேண்டாம். இவர்கள் நாட்டை பாழாக்குகிறார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

பிரகலாத்ஜோஷி குறித்த கருத்துக்கு பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட அக்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிராமணர் வகுப்பு குறித்து இழிவாக பேசிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story