தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லைஒருவர் மீது கூட ஊழல் வழக்கு தொடராத 'லோக்பால்'நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி


தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லைஒருவர் மீது கூட ஊழல் வழக்கு தொடராத லோக்பால்நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி
x
தினத்தந்தி 23 March 2023 9:15 PM GMT (Updated: 23 March 2023 9:15 PM GMT)

‘லோக்பால்’ அமைப்பு இதுவரை ஒருவர் மீது கூட ஊழல் வழக்கு தொடரவில்லை. தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களையும் நிரப்பவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தேசிய அளவில் லோக்பால் அமைப்பும், மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பும் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன.

இதற்கிடையே, 'லோக்பால்' செயல்பாடுகள் குறித்து பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம், நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்தது. அதுதொடர்பான அறிக்கையை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், லோக்பால் செயல்பாடு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது. நிலைக்குழு கூறியிருப்பதாவது:-

'லோக்பால்' அமைப்புக்கு நடப்பு நிதிஆண்டில் 2 ஆயிரத்து 518 புகார்கள், நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் அல்லாமல் வந்துள்ளன. 242 புகார்கள், நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் வந்துள்ளன. அவற்றில் 191 புகார்களை முடித்து வைத்துள்ளது.

ஆனால், இதுவரை ஒருவர் மீது கூட ஊழல் வழக்கு தொடரவில்லை. பெரும்பாலான புகார்களை 'நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் இல்லை' என்ற காரணத்தின் அடிப்படையில், 'லோக்பால்' அமைப்பு நிராகரித்துள்ளது.

பொதுவாழ்க்கையில் ஊழலை ஒழிக்கவும், நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்தவும் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. எனவே, அது செயல்படுபவராக இருக்க வேண்டுமே தவிர, தடுப்பவராக இருக்கக்கூடாது.

தொழில்நுட்ப குறைபாடு அடிப்படையில், புகார்களை நிராகரிக்கக்கூடாது. அதன் செயல்பாடுகள், திருப்தி அடையும்வகையில் இல்லை.

மேலும், லோக்பால் தலைவர் பதவியில் இருந்து நீதிபதி பி.சி.கோஷ் கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு ெபற்றார். இன்னும் அப்பதவி காலியாக உள்ளது. அதை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

நீதித்துறை சார்ந்த 2 உறுப்பினர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. ஊழல் புகார்களை விசாரிக்க விசாரணை இயக்குனர் தலைமையில் ஒரு விசாரணை குழுவும், ஊழல் வழக்கு தொடர வழக்குகள் இயக்குனர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்று லோக்பால் சட்டம் கூறுகிறது.

ஆனால் இந்த குழுக்கள் அமைக்கப்படவில்லை. அவை விரைவில் அமைக்கப்படும் என்று நம்புகிறோம். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கும் இந்நேரத்தில், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை 'லோக்பால்' வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நிலைக்குழு கூறியுள்ளது.


Next Story