உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2 கோடி சிக்கியது


உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2 கோடி சிக்கியது
x

கலபுரகியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற கட்டுக்கட்டாக ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெலகாவியில் ரூ.16 லட்சம் மதிப்பிலான சேலைகள் சிக்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலபுரகி:

ரூ.1.40 கோடி பறிமுதல்

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கலபுரகி மாவட்டத்தில் உள்ள கின்னிசகட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த வாகனத்தில் சோதனை நடத்திய போது கட்டுக்கட்டாக ரூ.1.40 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் வாகனத்தில் இருந்தவர்களிடம் இல்லை. இதையடுத்து, ரூ.1.40 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெலகாவியில் ரூ.16 லட்சம் சேலைகள்

இதுபோல், கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தாலுகாவில் அமைக்கப்பட்டு இருந்த சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக கலபுரகியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.90 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கலபுரகி மாவட்ட கலெக்டர் யஷ்வந்த் வி.குருகல் தெரிவித்துள்ளார்.

இதுபோல், பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் நடந்த சோதனையில் ரூ.16 லட்சத்திற்கு சோலைகளும், பீரவாடி சோதனை சாவடியில் ரூ.2.89 லட்சம் ரொக்கமும், ஹூக்கேரி சோதனை சாவடியில் ரூ.1.90 லட்சம் ரொக்கமும், ராய்பாக், அதானி தாலுகாவில் ரூ.7½ லட்ச ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்னர்.


Next Story