ஒர்லி தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா? ஷிண்டேவுக்கு ஆதித்ய தாக்கரே சவால்


ஒர்லி தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா? ஷிண்டேவுக்கு ஆதித்ய தாக்கரே சவால்
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:46 PM GMT)

பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒர்லி தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா? என முதல்-மந்திாி ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதித்ய தாக்கரே சவால் விடுத்து உள்ளார்.

மும்பை,

பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒர்லி தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா? என முதல்-மந்திாி ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதித்ய தாக்கரே சவால் விடுத்து உள்ளார்.

துரோகிகள்

சிவசேனா கட்சி கடந்த ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. அந்த கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார். ஏக்நாத் ஷிண்ேட மற்றும் அவரது அணியில் 40 எம்.எல்.ஏ.க்கள், 13 எம்.பி.க்களை உத்தவ் தாக்கரே சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே துரோகிகள் என கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அவர் கடந்த சில நாட்களுக்கு முன் செம்பூரில் நடந்த நிகழ்ச்சியில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒர்லி தொகுதியில் எனக்கு எதிராக போட்டியிட தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

ஷிண்டேக்கு சவால்

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் உங்களின் முன் சவாலை வைக்கிறேன். 13 துரோகி எம்.பி.க்கள், 40 எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட வேண்டும். அவர்கள் தேர்தலில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என நான் பார்க்கிறேன். சட்டவிதிகளின்படி தேர்வாகாத இந்த முதல்-மந்திரிக்கும் ஒரு சவால் விடுகிறேன். நான் எனது ஒர்லி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு எதிராக அவர் போட்டியிடட்டும். அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என நான் பார்க்கிறேன்.

நீங்கள் எல்லா அரசு எந்திரம், அணிமாற பெற்ற பணம் எல்லாவற்றையும் பயன்படுத்துங்கள். ஒரு சிவசேனா தொண்டனை கூட உங்களால் வாங்க முடியாது" என்றார்.

பக்குவம் இல்லாமல் பேசுகிறார்

ஆதித்ய தாக்கரே பேச்சு குறித்து ஷிண்டே அணி எம்.எல்.ஏ. மங்கேஷ் குடல்கர் கூறியதாவது:-

சவால் விடுவது சரியானது அல்லது என ஆதித்ய தாக்கரேவுக்கு சொல்ல விரும்புகிறேன். ஷிண்டே அரசு நன்றாக வேலை செய்து வருகிறது. எங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என அவரை கேட்டுக்கொள்கிறேன். நான் குர்லாவில் ராஜினாமா செய்கிறேன். அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் குர்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

''பக்குவம் இல்லாததால் ஆதித்ய தாக்கரே இதுபோல பேசுகிறார். ஒர்லியில் அவர் வெற்றியை உறுதி செய்ய 2 பேரை எம்.எல்.சி. ஆக்கினோம். அவர் ஒர்லியில் ராஜினாமா செய்துவிட்டு, தானேயில் எங்களுடன் போட்டியிடுவரா என எங்களுக்கும் சவால்விட தெரியும். ஆனால் அது நமது கலாசாரத்தில் இல்லை'' என ஷிண்டே அணி மந்திரி தீபக் கேசர்கர் கூறினார்.


Next Story