மும்பை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை: பட்னாவிசுக்கு மாணவர்கள் கடிதம்


மும்பை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை: பட்னாவிசுக்கு மாணவர்கள் கடிதம்
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:46 PM GMT)

மும்பை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை சம்பவத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மும்பை,

மும்பை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை சம்பவத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மாணவர் தற்கொலை

குஜராத்தில் உள்ள ஆமதாபாத்தை சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்ற மாணவர் மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக் (கெமிக்கல்) முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி வளாகத்தில் உள்ள விடுதி கட்டிடத்தின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஐ.ஐ.டி.யில் பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், அதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளார்.

இருப்பினும் மும்பை ஐ.ஐ.டி. அமைத்த விசாரணை குழு சாதி அடிப்படையிலான பாகுபாடுகளால் அவர் இறந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்தது. மேலும் கல்வி திறன் மோசமாக இருந்ததால் பயத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறியது.

துணை முதல்-மந்திரிக்கு கடிதம்

இந்தநிலையில் இந்த மரணம் குறித்து விசாரிக்க மூத்த போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைந்துள்ளது. அம்பேத்கர், பெரியார், புலே ஆய்வு வட்டம், அம்பேத்கரைட் மாணவர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதியுள்ளனார். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சட்டப்படி ஒரு கல்வி நிறுவனம் கடைப்பிடிக்க வேண்டிய இடஒதுக்கீடு, மனநல ஆலோசனை, முறையான குறைத்தீர்ப்பு கூட்டம் ஆகியவற்றை ஐ.ஐ.டி. நிர்வாகம் செயல்படுத்தி இருந்தால் தர்ஷன் சோலங்கிக்கு இன்று 19 வயது ஆகி இருக்கும்.

தர்ஷன் சோலங்கியின் பெற்றோர் எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்வதற்காக பலமுறை மும்பை வந்தனர். ஆனால் பவாய் போலீஸ் நிலையம், சிறப்பு புலனாய்வு குழு மற்றும் மும்பை போலீஸ் மூத்த அதிகாரிகள் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

தகுதி மீது பழி

சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், அவர்களின் எப்.ஐ.ஆர்.ரை ஏற்க மறுப்பது சட்டப்படி புலனாய்வு குற்றத்தை பற்றிய புகாரை பதிவு செய்வதற்கான குடும்பத்தின் உரிமையை அங்கீகரிக்க மறுப்பதாகும்.

போலீசார் சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற கோணத்திலேயே விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இதனால் மும்பை ஐ.ஐ.டி. அமைந்த விசாரணை குழுவின் விசாரணை அறிக்கையே, சிறப்பு புலனாய்வு குழுவும் மீண்டும் வலியுறுத்தும் என்று அஞ்சுகிறோம்.

அவர்கள் தர்ஷன் சோலங்கியின் தகுதியின் மீது பழி போடுகிறார்கள். ஆனால் அவருக்கு பல்வேறு துஷபிரயோகம் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை புறக்கணிக்கின்றனர்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


Next Story