சட்டசபைக்கு ஒன்றாக வந்த உத்தவ், பட்னாவிஸ்


சட்டசபைக்கு ஒன்றாக வந்த உத்தவ், பட்னாவிஸ்
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:46 PM GMT)

முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் சட்டசபைக்கு ஒன்றாக வந்த ருசிகர சம்பவம் நடந்து உள்ளது.

மும்பை,

முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் சட்டசபைக்கு ஒன்றாக வந்த ருசிகர சம்பவம் நடந்து உள்ளது.

கூட்டணி முறிவு

மராட்டியத்தில் சிவசேனா, பா.ஜனதா கட்சிகள் 25 ஆண்டுகளுக்கு மேல் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்டன. 2 கட்சியினரும் அண்ணன், தம்பிகளை போலவே இருந்தனர். மேல் மட்ட தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் 2 கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இதன் காரணமாக பா.ஜனதா, சிவசேனா உறவு முறிந்தது.

உச்சம் தொட்ட மோதல்

2 கட்சியை சேர்ந்தவர்களும் ஒருவரை, ஒருவர் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிசும், உத்தவ் தாக்கரேவும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வந்தனர். சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனா உடைந்தது. அவர் பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவி மட்டுமின்றி கட்சியையும் இழந்தார்.

இதன் காரணமாக உத்தவ் தாக்கரே சிவசேனா, பா.ஜனதா மோதல் உச்சம் தொட்டது.

சேர்ந்து வந்த பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே

இந்தநிலையில் நேற்று காலை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபைக்கு வந்தார். அவர் வந்த போது, உத்தவ் தாக்கரேவின் காரும் உள்ளே வந்தது. இதை கவனித்த தேவேந்திர பட்னாவிஸ் 2 நிமிடங்கள் காத்து இருந்தார்.

உத்தவ் தாக்கரே கார் வந்தவுடன், பட்னாவிஸ் அவரை வரவேற்றார். 2 பேரும் ஒன்றாக நடந்து சென்றனர். அப்போது அவர்கள் சிரித்து பேசினர். சுமார் 2 நிமிடங்கள் வரை அவர்கள் ஒன்று சேர்ந்தபடி நடந்து சென்றனர்.

அவர்களுடன் ஆதித்ய தாக்கரே, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தான்வே, மனிஷா காயந்தே உள்ளிட்டவர்களும் இருந்தனர்.

எதிரும், புதிருமாக மாறிய இரு தலைவர்களும் திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story