பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கலைப்போட்டிகள்


நாமக்கல்லில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடந்தது. இப்போட்டியை கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

கலைப்போட்டிகள்

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சின்ராஜ் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் உமா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 2022-23-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தார்.

3 பிரிவுகளாக நடந்தது

இக்கலை திருவிழா போட்டிகள் 3 பிரிவுகளாக நடைபெற உள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கவின்கலை - நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் என 6 தலைப்புகளிலும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை - நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, தோற்க்கருவி, கருவி இசை துளை காற்றுக் கருவிகள், கருவி இசை தந்திக் கருவிகள், இசைச் சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் என 9 தலைப்புகளிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காண்கலை - நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, தோற்க்கருவி, கருவி இசை துளை காற்றுக்கருவிகள், கருவி இசை தந்திக்கருவிகள், இசைச் சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் 9 தலைப்புகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் 6,821 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 464 மாணவ, மாணவிகள் மாநில அளவில் பங்கேற்று, இதில் 42 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற இளவரசன் என்ற மாணவருக்கு கலையரசன் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் 19,750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 7,230 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்களை ஊக்கப்படுத்தப்படும்.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா

மேலும், மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். மாணவ, மாணவிகள் படிப்போடு தனித்திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்றத் தலைவர் கலாநிதி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கணேசன், பாலசுப்பிரமணியன், மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் குமார், பாஸ்கரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story