சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு- ஜல் ஜீவன் திட்டத்தால் பயனில்லை என குற்றச்சாட்டு


சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு- ஜல் ஜீவன் திட்டத்தால் பயனில்லை என குற்றச்சாட்டு
x

மதுரை மாவட்டத்தில் பொது கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்கள் ஜல்ஜீவன் திட்டத்தால் எந்த பயனும் இல்லை என குற்றம்சாட்டினர்.

மதுரை


செலவினங்கள்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் அந்த குழுவினர் நேற்று மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த குழுவினர் ரேஸ்கோர்ஸ் மைதானம், கே.கே.நகர் குடிநீர் தொட்டி, சிட்டம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர்கள் குருத்தூர் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் சார்பாக வழங்கப்பட்டுள்ள வேளாண்மை எந்திரம் பெற்ற பயனாளிகள், சத்திரப்பட்டி கிராமத்தில் பிரதமர் குடியிருப்புத் திட்ட பயனாளிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார்கள். அதன்பின் குழுவினர் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு செய்தார்கள். இறுதியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆய்வு செய்தனர். இதைதொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி அதிகாரிகளிடம் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இதுகுறித்து பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 148-வது பிரிவின் கீழ் நிறுவப்பட்ட இந்தியாவின் உச்ச தணிக்கை நிறுவனமாக இந்தியக் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் உள்ளது. அரசாங்கத்தால் கணிசமான நிதியுதவி பெறும் தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்கள் உள்பட இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அனைத்து வரவுகள் மற்றும் செலவினங்களை தணிக்கை செய்ய அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

நோக்கம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு என்பது மத்திய-மாநில அரசுகள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது துறை வாரியாக அரசுதிட்டப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆய்வு செய்கின்றன. மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு 2-வது முறையாக ஆய்வு செய்கிறது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் பயனற்றதாக உள்ளது. நீர் இல்லாத இடங்களில் கூட வெறும் குழாய் போட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சட்டமன்றப் பேரவையின் பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன்(திருச்செங்கோடு), நத்தம் விஸ்வநாதன்(நத்தம்), பாலாஜி (திருப்போரூர்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), சட்டமன்றப் பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன், மதுரை மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story