திறமைகளை வெளிக்கொண்டுவரகலைத்திருவிழா உதவும்


திறமைகளை வெளிக்கொண்டுவரகலைத்திருவிழா உதவும்
x

அரசுப் பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர கலைத்திருவிழா உதவும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.

திருப்பத்தூர்

கலைத்திருவிழா

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் பன்முகத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைதிருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு, மாவட்ட அளவிலான கலைதிருவிழா திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிசுப்ராயன் வரவேற்றார்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

மாணவர்களுக்கு உதவும்

அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர இந்த கலைத்திருவிழா கட்டாயம் உதவும். தமிழர்களின் வாழ்வில் கூத்தும், இசையும் இணைந்த ஒன்றாகவே உள்ளது. தொல்காப்பியத்தில் இசை 24 வகையில் கையாளப்பட்டுள்ளது. அது போக, ஒவ்வொரு கருவிகளையும் எப்போது இசைக்க வேண்டும் என்பது உள்பட விதியாக வகுத்துள்ளனர்.

உங்களுடைய தனித்திறமை வெளிப்பட வேண்டும். இப்போது சொந்த மரபில், இசையில் பாடும் நபர்கள் குறைந்து விட்டனர். அனைவரும் உலக இசையை நம் இசைக்கு மாற்றி செய்கின்றனர். ஆனால் நம் மண்மணத்துடன் இசையை கொண்டு சென்றால்தால்தான் பேரும், புகழும் நமக்கு கிடைக்கும். இதற்கு இந்த கலைத்திருவிழா மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் சாதனை படைத்து மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத்தலைவர் சபியுல்லா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) அமுதா நன்றி கூறினார்.


Next Story