கறிக்கோழி கொள்முதல் விலை தொடர் சரிவு


கறிக்கோழி கொள்முதல் விலை தொடர் சரிவு
x
தினத்தந்தி 26 Oct 2023 8:45 PM GMT (Updated: 26 Oct 2023 8:45 PM GMT)

ஐப்பசி மாதம் பிறந்தும் நுகர்வு அதிகரிக்காததால், கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

ஐப்பசி மாதம் பிறந்தும் நுகர்வு அதிகரிக்காததால், கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

கறிக்கோழி உற்பத்தி

தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது.

விலை சரிவு

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி ரூ.108 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை(உயிருடன்) தொடர்ந்து கிலோவிற்கு ரூ.2, ரூ.3 என சரிந்து தற்போது கிலோ ரூ.100 ஆக உள்ளது. இரண்டு வாரத்தில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.8 சரிந்துள்ளது. இது கறிக்கோழி உற்பத்தியாளர்களை கவலை அடைய செய்துள்ளது. தற்போது சிக்கன் ஸ்டாலில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு உயரும்

இதுகுறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

ஐப்பசி மாதம் பிறந்து நேற்றுடன் 9 நாட்கள் ஆகியும் கறிக்கோழி கொள்முதல் விலை உயரவில்லை. மாறாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தசரா என தொடர் விசேஷங்களால் நுகர்வு சரிந்து கொள்முதல் விலையும் சரிந்துள்ளது.

அடுத்த மாதம்(நவம்பர்) தீபாவளி பண்டிகை வர உள்ளதால், இன்னும் சில நாட்களில் கறிக்கோழிக்கான ஆர்டர்கள் வர ஆரம்பிக்கும். அப்போது கொள்முதல் விலை உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story