செட்டிநாட்டு கைத்தறி புடவைகள் விற்பனை மும்முரம்


செட்டிநாட்டு கைத்தறி புடவைகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரைக்குடி பகுதியில் செட்டிநாட்டு கைத்தறி புடவைகள் விற்பனை களைகட்டி வருகிறது.

சிவகங்கை

கைத்தறி புடவைகள்

செட்டிநாடு என்றாலே விருந்து உபசாரம், கலாசாரம், கலை நுணுக்கத்துடன் கூடிய கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம் சங்கள் நினைவுக்கு வருவது உண்டு. அதிலும் இங்கு தயாராகும் செட்டிநாடு புடவைகளுக்கு தனி மவுசும் உண்டு. இந்த தயாரிப்பின் சிறப்பம்சத்தை பாராட்டி கைத்தறி நெசவாளர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் செட்டிநாடு கைத்தறி புடவைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது வீடுகளில் புத்தாடை எடுத்து அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

வெளிநாடுகளுக்கு

இதையொட்டி காரைக்குடி மற்றும் செட்டிநாடு பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் புத்தம் புதிய டிசைன்களில் கைத்தறி புடவைகள் தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள புடவைகளையும் விற்பனைக்காக பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் செட்டிநாடு சேலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வெங்கட்ராமன் கூறியதாவது, செட்டிநாடு என்று அழைக்கப்பட்டு வரும் இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் புடவைகளுக்கு உலகம் முழுவதும் தனி மவுசு உள்ளது.

கேரளா, ஆந்திரா, மும்பை, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடு மக்களும் இந்த செட்டிநாடு புடவை களை அதிகளவில் விரும்புகின்றனர்.

நேரடி விற்பனை

இங்கு சுங்கடி மற்றும் கண்டாங்கி புடவைகள், எடை குறைவான அளவில் பல்வேறு வண்ணங்களை கொண்ட புடவைகள், பூ, வண்ண மயில்கள் டிசைன்கள் கொண்ட புடவைகள், ஊசிகோடு, தாழம்பூ கரை, வைகை ஊசி, செட்டிநாடு கட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான புடவைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் 300 கிராம் முதல் 350 கிராம் வரை எடை குறைவாக உள்ள புடவைகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு ரூ.800 முதல் ரூ.8 ஆயிரம் வரை புடவைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. நீடித்த உழைப்பு, தரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகளவில் மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான மக்கள் நேரடியாக வந்து புடவைகளை ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர். இதுதவிர வெளிநாடுகளில் இருந்து செட்டிநாடு பகுதிகளுக்கு வரும் பல்வேறு தரப்பினரும் இங்கு வந்து அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். மேலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கும் நேரடியாக இங்கிருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story