மாணவ, மாணவிகள் 100 சதவீதம்தேர்ச்சி பெற வேண்டும்


மாணவ, மாணவிகள் 100 சதவீதம்தேர்ச்சி பெற வேண்டும்
x

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அறிவுரை வழங்கினார்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், மின்னக்கல் கிராமத்தில் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 8 பேருக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணை, 5 பேருக்கு மனைவரி தோராய பட்டா ஆணை, 9 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 7 பேருக்கு தனி பட்டா மாறுதல் ஆணை, ஒருவருக்கு ஆதரவற்ற விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், 15 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, 7 பேருக்கு மின் இணைப்பு தடையில்லா சான்று, மகளிர் திட்டம் சார்பில் 2 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.70 ஆயிரம் கடனுதவி, வேளாண்மைத்துறையின் சார்பில் 3 விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 5 விவசாயிகள் என மொத்தம் 63 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சித்தலைவர் உமா வழங்கினார்.

இம்முகாமில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தங்கம்மாள் பிராகஷம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துரைசாமி, மின்னக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

100 சதவீதம் தேர்ச்சி

அதைத்தொடர்ந்து மின்னக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார். மேலும் இந்த கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டும் என அறிவுரை வழங்கி, தேர்ச்சி அடைய அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டு சிறந்த கல்வியாளர்களாக திகழ வேண்டும் என்றார்.

மேலும் அத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வெண்ணந்தூர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள், உணவுக்கூடம், தங்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Next Story