"கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து விரிவான விசாரணை"- சபாநாயகர் அப்பாவு


கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து விரிவான விசாரணை- சபாநாயகர் அப்பாவு
x

“கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீச்சு பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

திருநெல்வேலி

சபாநாயகர் அப்பாவு நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல் குண்டுவீச்சு

தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் 9 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. 9 சம்பவங்களையும் நிகழ்த்தியது பா.ஜனதா மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள். கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

10-வதாக கவர்னர் மாளிகை அருகே ெபட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிகளும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது கிடையாது. கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்.

கண்டனம்

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்துவார். தமிழகத்தில் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தார்கள் என்றால், அது நடக்காது. இந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்துக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

இந்த சம்பவத்தில் கைதான கருக்கா வினோத் ஏற்கனவே கமலாலயத்தில் பெட்ேரால் குண்டுவீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே, இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா கட்சியினர் இருபிரிவுகளாக செயல்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சி.பி.ஐ. விசாரணை

தமிழகத்தில் வன்முறை சம்பவங்களை தூண்டுவதற்கு துடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? என்பது மக்களுக்கு தெரியும். ெபட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தமிழக போலீசார் முறையாக விசாரித்தால் உண்மையை சொல்லி விடுவார்? என்ற அச்சத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சங்கரையாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் அனுமதி அளிக்காதது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அரைகுறை படிப்பு ஆல்வேஸ் டேஞ்சர், அதுதான் அய்யா கவர்னர்'' என்றார்.


Next Story