மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தும் செயல்களை செய்யக்கூடாது


மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தும் செயல்களை செய்யக்கூடாது
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தும் எந்த செயல்களையும் செய்யக்கூடாது என்று முத்துரங்கம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

வேலூர்

வரலாற்று சுவடுகள்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை 3-ம் ஆண்டு படிக்கும் 78 மாணவர்களுக்கு 45 மணிநேரம் வரலாற்று நிகழ்வை கதை சொல்லும் கலை மற்றும் அறிவியல் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியின் நிறைவு வேலூர் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. நான் முதல்வன் திட்டம் கதை சொல்லும் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நீனாகாயத்ரி, திருவள்ளுவர் பல்கலைக்கழக நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன், கல்லூரி நிதியாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர் வரவேற்றார்.

மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தும்

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி பேசியதாவது:-

வேலூர் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாகும். வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. அதில் இருந்து நல்லது, கெட்டதை தெரிந்து கொண்டு நடக்க வேண்டும். வரலாற்றை பார்த்து தவறுகளை திருத்தி கொள்ளலாம். சிந்துசமவெளி நாகரீக காலத்தில் சிறப்பான கட்டிட கட்டமைப்பு இருந்ததை நாம் அறியலாம்.

வன்முறையும் ஒருவகையில் போர் தான். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக நின்று வன்முறையில் ஈடுபடுவதும் போர். மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தும் எந்த செயல்களையும் நாம் செய்ய கூடாது. வரலாறு சிறப்புமிக்க மாவட்டத்தில் வசிக்கும் நாம் அனைத்திலும் மற்றவர்களுக்கு முன்னுதாரமாக நடக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

நடித்து காட்டினர்

முன்னதாக கல்லூரி மாணவ-மாணவிகள் சிந்துசமவெளி, மொகஞ்சதாரோ, ஹரப்பா, அசோகர், பல்லவர், சோழர், பாண்டியர் மற்றும் வேலூர் மாவட்டத்தின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு காலக்கட்டங்களில் வசித்த மக்கள் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் அக்காலத்து மக்களை போன்று உடையணிந்து, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கதைகளாக கூறி தத்ரூபமாக நடித்து காட்டினர்.

இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார். கல்லூரி முதல்வர் மலர் வேலுநாச்சியார் போன்று வேடமணிந்து அவரின் வாழ்க்கை வரலாற்றை கூறினார்.

இதில் நான் முதல்வன் திட்டம் கதை சொல்லும் பிரிவு அலுவலர்கள் ரம்யா, சீமா, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story