பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும்


பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

வேலூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.

வேலூர்

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணைமேயர் சுனில்குமார், துணை கமிஷனர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு 6 வார்டுகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்

பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

எந்தந்த வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை வார்டுகளில் மேற்கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ளதால் அதற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். உள்ளூர் குடிநீர் ஆதாரங்களைக் கொண்டு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கவுன்சிலர்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story