சதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு


சதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 Oct 2023 12:30 AM GMT (Updated: 27 Oct 2023 12:30 AM GMT)

ஊட்டி ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார்கள்.

நீலகிரி

நீலகிரி மலை ரெயில் சேவை 1899-ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊட்டி ரெயில் நிலையம் 1908-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு நீலகிரி மலை ரெயில் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது. 2005-ம் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக ஊட்டி மலை ரெயிலாக அறிவிக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இதனால் பாரம்பரிய சிறப்பம்சங்கள் மாறாமல், நவீன வசதிகள் ஏற்படுத்துவதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வே மேலாளர் மற்றும் சேலம் கோட்ட மேலாளர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து சென்றனர்.

இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் ஊட்டி ரெயில் நிலையத்தில் மட்டுமல்லாமல் ரெயில் நிலையம் அருகிலுள்ள ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான சதுப்பு நிலத்திலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சதுப்பு நிலத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து நம்ம நீலகிரி அமைப்பு நிர்வாகி ஷோபனா சந்திரசேகர், தேசிய பசுமைப் படை கள அலுவலர் சிவதாஸ், உலகளாவிய வன விலங்குகள் நிதியமைப்பு அமைப்பாளர் மோகன்ராஜ், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் மற்றும் பல்வேறு ஆர்வலர்கள் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-


ஊட்டி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள 2½ ஏக்கர் சதுப்பு நிலம் பலவகையான பறவைகள் மற்றும் தாவர உயிரினங்களின் இருப்பிடமாக உள்ளது. தற்போதுவரை, இந்த பகுதி நீலகிரியின் பூர்வீக கால்நடைகளான தோடர் இன மக்கள் வளர்த்து வரும் எருமைகளின் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தப்படுகிறது.

இதற்கிடையே ஊட்டி ரெயில் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு எதிர்ப்புகளை மீறி பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.

ஆனால் ஈரநிலத்தில் ஒரு சில கட்டிடங்கள் கட்டப்பட்ட பிறகு, நிரந்தர கான்கிரீட் கட்டமைப்புகளை தாங்குவதற்கு மைதானம் பொருத்தமற்றது என்பது தெரிந்த பின்னர் ரெயில்வே நிர்வாகம் பணிகளை கைவிட்டது. தற்போது மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளது. எனவே சதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகளை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story