பட்டதாரி பெண்ணிடம் ரூ.27¼ லட்சம் மோசடி


பட்டதாரி பெண்ணிடம் ரூ.27¼ லட்சம் மோசடி
x

ஆன்லைனில் பகுதிநேர வேலை என கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.27¼ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

ஆன்லைனில் பகுதிநேர வேலை என கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.27¼ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் பகுதி நேர வேலை

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் 36 வயதான பட்டதாரி பெண். திருமணமான அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை என்றும், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் என்று குறுஞ்செய்தி வந்தது.

இதனை நம்பி தனது சுய விவரம் மற்றும் வங்கி கணக்கு எண்ணை அனுப்பிய அந்த பெண்ணுக்கு ஒரு போலியான இணையதளத்தின் வழியாக லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்கில் நவீன விடுதிகளின் புகைப்படங்களை அனுப்பி அதற்கு ரேட்டிங் ஸ்டார், லைக் போன்ற முறையில் அதிக லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

பல்வேறு டாஸ்க்குகள்

இதனையடுத்து அந்த பெண்ணுக்கு பல்வேறு டாஸ்க்குகள் அட்டவணை முறைப்படி கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த அட்டவணையின்படி முதல் தவணையாக ரூ.90 ஆயிரம் செலுத்திய அவருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை.

இதனையடுத்து லாபத் தொகை குறித்து தனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய எண்ணில் தொடர்பு கொண்டு அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அடுத்தடுத்த டாஸ்க்குகளை செய்து முடித்தால்தான் லாபம் கிடைக்கும் என்று எதிர்முனையில் பேசியவர் கூறியுள்ளார்.

ரூ.27¼ லட்சம் மோசடி

இதனை உண்மை என நம்பிய அந்த பெண் மீண்டும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் செலுத்தியுள்ளார். தொடர்ச்சியாக அவர் பல்வேறு தவணைகளாக ரூ.27 லட்சத்து 28 ஆயிரத்து 17 ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பட்டதாரி பெண், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசியவர் நீங்கள் முழு டாஸ்க்கையும் செய்து முடித்தால்தான் உங்களுக்கான லாபம் கிடைக்கும் என்று கூறியதோடு மேலும் பணம் கட்டுமாறு கூறியுள்ளார்.

சைபர் கிரைம் போலீசில் புகார்

அப்போதுதான் தனக்கு மோசடி நடந்ததை உணர்ந்த பட்டதாரி பெண் இது குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story