குப்பைகளால் சுகாதார சீர்கேடு


தினத்தந்தி 26 Oct 2023 11:35 AM GMT (Updated: 26 Oct 2023 1:33 PM GMT)

காங்கயம் பஸ் நிலைய பகுதியை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் பஸ் நிலைய பகுதியை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க ேவண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது காங்கயம் பஸ் நிலையம். இந்த பஸ் நிலையம் ஈரோடு, திருச்சி, கோவை, தாராபுரம், பழனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயணிகள் வந்து செல்லும் முக்கிய பஸ்நிலையமாக உள்ளது.

மேலும் தினந்தோறும் கிட்டத்தட்ட 5 ஆயிரம் முதல் 10ஆயிரம் பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்த பஸ்நிலைய பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்களது கடைகளில் சேகரமாகும் குப்பைகளை பஸ்நிலைய வளாக பகுதியிலேயே கொட்டி விடுகின்றனர்.

வாழைக்கன்று,தோரணங்கள்

மேலும் ஆயுத பூஜையன்று தங்களது கடைகளில் கட்டி வைத்திருந்த வாழைக்கன்றுகள், தோரணங்கள் ஆகியவற்றை போட்டு வைத்துள்ளனர். இதனால் கொசுக்கள் அதிகமாக பரவும் அவலநிலை உள்ளது.

மேலும் கழிவறை அருகே கட்டிட கழிவுகள் நீ்ண்ட நாட்களாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் தடுமாறி விழும் அபாய நிலை உள்ளது.

நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

இந்த பஸ் நிலையத்தில் தற்போது அனைத்து இடங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக உள்ளது. இதனால் காங்கயம் பஸ் நிலையம் வந்து செல்லும் பயணிகள் முகம் சுழிக்கும் அவல நிலை உள்ளது. மேலும் பயணிகளுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதனால் காங்கயம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காங்கயம் பஸ்நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற காங்கயம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story