காப்பீடு திட்டத்தில்பயிர் மகசூல் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிப்பு: கலெக்டர் கோ.லட்சுமிபதி உறுதி


தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:48 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் பயிர் மகசூல் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கோ.லட்சுமிபதி உறுதி அளித்துள்ளார்.

தூத்துக்குடி

பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் மகசூல் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி உறுதி அளித்துள்ளார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்டகலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், விதை, உரம் போன்ற வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாட்டின்றி கிடைக்கவும், மானிய விலையில் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் வறட்சியால் அனைத்து பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, விடுபட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை முறையாக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்.

பயிர் விளைச்சல், பாதிப்பு போன்ற விவரங்களை வேளாண்மை அலுவலக தகவல் பலகைகளில் வைக்க வேண்டும். புதூர், காடல்குடி பிர்காக்களில் 2021- 2022-ம் ஆண்டுக்கு மக்காசோளம் பயிருக்கான காப்பீட்டு தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடையில்லா சான்று வழங்கும் போது நன்கு ஆய்வு செய்து வழங்க வேண்டும். பதநீர் இல்லாமல் சீனி கலந்து தயாரிக்கப்படும் கற்கண்டு மற்றும் கருப்பட்டியை கண்டறிய முடியுமா? என தெரிவிக்க வேண்டும். ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கருகிய வாழைகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தாமிரபரணி, கருமேணி ஆற்றில் உள்ள தடுப்பணைகளை மழைக்காலத்தில் முழுமையாக நிரப்பி தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டுப்பன்றி

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும், காட்டுப் பன்றிகளால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க ஒரு கருவி பயன்படுத்தப்படுகிறது. அந்த கருவியை இங்கேயும் கொண்டு வந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். விளாத்திகுளம், வேம்பார் பிர்காவில் 2021- 2022-ம் ஆண்டுக்கு மிளகாய் பயிருக்கு காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. பயிர் காப்பீட்டு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மகசூல் கணக்கீடு சரியாக இருப்பதில்லை. எனவே, பயிர் காப்பீட்டு திட்டத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் கொடுக்காமல் அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

கலெக்டர் உறுதி

கூட்டத்தில் கலெக்டர் பதிலளித்து பேசுகையில்,

பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் மகசூல் கணக்கீட்டில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படும். இது தொடர்பான விவரங்கள் முறையாக சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் தகவல் பலகையில் வைக்கப்படும். தனிப்பட்ட விவசாயிகள் வாரியாக பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. நன்செய் நிலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் விஷயம் கவனத்துடன் கையாளப்படும். இதில் அரசின் உத்தரவுகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும். சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியை கண்டறியும் தொழில்நுட்பம் தற்போது இல்லை. இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்துக்கு முன்வடிவு அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்குள் அதற்கான தொழில்நுட்பம் வந்துவிடும். அப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் தவறாமல் நடத்தப்படும். காட்டுப்பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முரளிகண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் நடுக்காட்டுராஜா மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story