குற்றவாளிகளை கையாளும் முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்


குற்றவாளிகளை கையாளும் முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:48 PM GMT)

குற்றவாளிகளை கையாளும் முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. கூறினார்.

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் (ஆப்கா) 4 மாநில சிறைத்துறை அதிகாரிகளுக்கு 3 மாத அடிப்படை பயிற்சி தொடக்கவிழா நேற்று நடந்தது. ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் மதன்ராஜ் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி. மாலினிகிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில், சிறை அதிகாரிகளுக்கு பயிற்சி மிகவும் முக்கியம். நாளுக்கு நாள் சமூகம் மாறி வருகிறது. அதற்கு ஏற்ப குற்றவாளிகளும் மாறி வருகின்றனர். எனவே குற்றவாளிகளை கையாளும் முறைகளை சிறை அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறைத்துறையில் சிறை நிர்வாகம், நீதி பரிபாலன அமைப்பு மிக முக்கியமானது. சிறை தண்டனை முடிந்து வெளியே செல்லும் கைதிகள் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடாத வகையில் அவர்களை நல்வழிப்படுத்த தொழில் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவை சேர்ந்த 46 ஜெயில் அதிகாரிகள் மற்றும் 10 நன்னடத்தை அதிகாரிகள் 10 பேர் என்று மொத்தம் 56 பேருக்கு 3 மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story