சந்திர கிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருப்பட்டூர் கோவில்களில் நாளை நடை சாத்தப்படும்


சந்திர கிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருப்பட்டூர் கோவில்களில் நாளை நடை சாத்தப்படும்
x

சந்திர கிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருப்பட்டூர் கோவில்களில் நாளை நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு தரிசனம் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். இந்நிலையில் நாளை(சனிக்கிழமை) சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் நாளை மாலை 5.30 மணிக்கு பிறகு அனைத்து சன்னதியிலும் நடை சாத்தப்படும். நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் இணைய ஆணையர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் மாலை சாயரட்சை அர்த்தஜாமம் பூஜை முடிந்து இரவு 7 மணிக்கு பிறகு கோவில் நடை சாத்தப்படுகிறது. மறுநாள் காலை 5.30 மணிக்கு ஆகம விதிப்படி சம்ப்ரோக்ஷண பூஜைகள் செய்து காலை 7 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வழக்கமாக காலை 7 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கும், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கும் நடை சாத்தப்படும். இந்நிலையில் பவுர்ணமியான நாளை சந்திரகிரகணம் நிகழ உள்ளதால் காலையில் அன்னாபிஷேக பூஜை நடைபெற்ற பின் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதனைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 7 மணிக்கு நடை திறக்கப்படும் என்று திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஜெய்கிஷன் தெரிவித்துள்ளார்.


Next Story