ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கடத்தல்: சேலத்தில் 32 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது


ஆந்திராவில் இருந்து மதுரைக்கு 32 கிலோ கஞ்சாவை கடத்திய 3 பேரை சேலத்தில் போலீசார் கைது செய்தனர்.

சேலம்

கஞ்சா கடத்தல்

ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு சிலர் கஞ்சா கடத்தி செல்வதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ்நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் சந்தேகப்படும்படி நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பைகளை பரிசோதனை செய்தபோது, அதில் 32 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

3 பேர் கைது

அதில், அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கல்யாணிபட்டியை சேர்ந்த மூர்த்தி (வயது 33), கீரிப்பட்டியை சேர்ந்த லிங்கேஷ் (28), வளையப்பட்டியை சேர்ந்த சந்தானம் (32) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சென்று 32 கிலோ கஞ்சாவை வாங்கிக்கொண்டு ரெயிலில் வேலூருக்கு கடத்தி வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து பஸ்சில் ஏறி சேலம் வந்து, மதுரை செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேர் மீதும் கஞ்சா கடத்தல் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story